Published : 02 Dec 2021 06:45 PM
Last Updated : 02 Dec 2021 06:45 PM
அயோத்தியில் ராமர் கோயில் சட்டத்திற்கு முரணாகக் கட்டாயத்தில் கட்டப்படுவதாக சமாஜ்வாதி எம்.பி.யான ஷபிக்கூர் ரஹ்மான் புர்க் கருத்து கூறியிருந்தார். இவர் மீது வழக்கு பதிவு செய்ய டெல்லியின் வழக்கறிஞர் போலீஸில் புகார் செய்துள்ளார்.
இது குறித்து நாடாளுமன்ற மக்களவையின் சமாஜ்வாதி எம்.பியான ஷபிக்கூர் ரஹமான் கூறுகையில், ‘‘ராமர் கோயில் கட்டாயத்தில் கட்டப்படுகிறது. இது சட்டத்திற்கு முரணாக கட்டப்படுகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டு அங்கு கோயில் கட்டப்படுகிறது.’’ எனத் தெரிவித்தார்.
இக்கருத்தின் மீது டெல்லியின் வழக்கறிஞரான வினீத் ஜிண்டால் அம் மாநிலப் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்யும் வகையில் பேசிய சமாஜ்வாதி எம்.பி ஷபிக்கூர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து டெல்லி மாநகரக் காவல்துறை ஆணையரிடம் வழக்கறிஞர் ஜிண்டால் அனுப்பியப் புகாரில், ‘‘அயோத்தி வழக்கில் கடந்த நவம்பர் 9, 2019 இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதில், கோயிலுக்காகவும், இடிந்த மசூதிக்காகவும் கட்ட என நிலமும் ஒதுக்க உத்தரவிடப்பட்டது. இதன்படியே கட்டப்பட்டு வரும் கோயிலின் மீது சமாஜ்வாதி எம்.பி கூறிய கருத்து நீதிமன்ற அவமதிப்பிற்குரியது.
இதன்மூலம், இந்து மற்றும் முஸ்லிம்கள் இடையே மோதலை உருவாக்க அவர் முயற்சித்துள்ளார். எனவே, இவரது மதவாதக் கருத்திற்காக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு பொதுநல சமூகப்பணியிலிருந்து சமாஜ்வாதி எம்.பி கூறுவது தவறு எனவும் குறிப்பிட்ட ஜிண்டால் அவர் மீது ஐபிசி 121, 153, 153-ஏ, 295, 298 மற்றும் 505 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யவும் வலியுறுத்தி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT