Published : 02 Dec 2021 02:39 PM
Last Updated : 02 Dec 2021 02:39 PM
மதுராவில் கிருஷ்ணர் கோயில் கட்டப்பட உள்ளதாக உத்தரப்பிரதேசத்தின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா அறிவித்துள்ளார். இதன்மூலம், சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மீண்டும் தனது இந்துத்துவா கொள்கையை முன்வைப்பதாகக் கருதப்படுகிறது.
உ.பி.யில் ஒரிரு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கானப் பிரச்சாரங்களை அங்கு ஆளும் பாஜக அரசின் தலைவர்களும் துவக்கி விட்டனர்.
இங்கு துணை முதல்வர்களில் ஒருவரான கேசவ் பிரசாத் மவுரியா நேற்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் அவர், ‘‘அயோத்தியில் ராமர், வாரணாசியின் விஸ்வநாதர் கோயில் பணிகள் நடைபெறுகின்றன. மதுராவிலும் கிருஷ்ணர் கோயில் கட்டப்படும்! ஜெய்ஸ்ரீராம்! ஜெய்சிவசம்போ! ஜெய்கிஷண்!’’ எனக் குறிப்பிட்டார்.
துணை முதல்வர் மவுரியாவின் இந்த பதிவால் உ.பி.யில் சர்ச்சை கிளம்பி விட்டது. இதன்மூலம், உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மீண்டும் தனது இந்துத்துவா கொள்கையை முன்வைத்தே களம் இறங்குவதாகக் கருதப்படுகிறது.
முகலாயர் பேரரசரர் அவுரங்கசீப்பால், மதுராவிலிருந்த கிருஷ்ணர் கோயில் இடிக்கப்பட்டு அதன் பாதி நிலத்தில் கியான்வாபி ஷாயி ஈத்கா மசூதி கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரலாற்று ஆவணங்களில் இடம்பெற்ற இந்த சம்பவ நிலத்தை தம் கடவுளான கிருஷ்ணர் பிறந்த இடமாக உ.பி. இந்துக்கள் நம்புகின்றனர்.
எனவே, அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை போல், கியான்வாபியையும் இடித்துவிட்டு கிருஷ்ணர் கோயில்கட்டுவது இந்துத்துவாவினரின் கொள்கையாக உள்ளது. 1991 இல் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சியில் இடப்பட்ட புனிதத்தலங்கள் பாதுகாப்பு சட்டப்படி, மதுராவின் மசூதியை எதுவும் செய்ய முடியாது.
எனினும், முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் சட்டத்தை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மதுராவின் நீதிமன்றத்திலும் மசூதியை இந்துக்களிடம் ஒப்படைக்கக் கோரி தொடுக்கப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இச்சூழலில், உ.பி.யின் துணை முதல்வர் மவுரியா தன் ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பால் சர்ச்சைகள் கிளம்பி விட்டனர். இதன் பின்னணியில் பாஜக மீண்டும் உ.பி.யில் ஆட்சி அமைப்பது இருப்பதாகக் கருதப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட விளக்கத்திற்கு துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, ‘‘அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்டமான கோயில் கட்டப்பட்டு வருகிறது.
வாரணாசியின் காசி விஸ்வநாதரின் கோயில் வளாகத்தின் பணியும் முடியும் தருவாயில் உள்ளது. இனி மதுராவின் கிருஷ்ணஜென்ம பூமியிலும் கோயில் கட்டக் காத்திருப்பது பாஜகவின் தேர்தல் நோக்கமல்ல.’’ எனத் தெரிவித்தார்.
சமீபத்திலும் பிரதமர் நரேந்தர மோடி தனது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியிலும் மதுராவின் முக்கியத்துவம் குறித்து குறிப்பிட்டிருந்தார். இன்னும் சில தினங்களில் அவர் வாரணாசியின் காசி விஸ்வநாதர் கோயில் வளாகக் கட்டிடங்களையும் திறந்து வைக்கிறார்.
கடந்த திங்கள்கிழமையிலும் கியான்வாபி மசூதியினுள் சிலை வைத்து பூஜிக்க இருப்பதாக இந்து அமைப்புகள் அறிவித்திருந்தனர். இதில், இந்து அமைப்புகளின் மூன்று நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, மதுராவில் கோயில் சர்ச்சையை கிளப்பி பாஜக உ.பி.யில் மீண்டும் ஆட்சி அமைக்கத் தீவிரம் காட்டுவதாகக் கருதப்படுகிறது. இதை கண்டித்து முன்னாள் முதல்வரான சமாஜ்வாதியின் அகிலேஷ்சிங் யாதவும், காங்கிரஸ் பொதுச்செயலாளரான பிரியங்கா வத்ராவும் கருத்து கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT