Last Updated : 02 Dec, 2021 02:23 PM

17  

Published : 02 Dec 2021 02:23 PM
Last Updated : 02 Dec 2021 02:23 PM

‘‘பாஜகவின் ஆக்ஸிஜன் சப்ளையர்’’- மம்தா மீது கடும் தாக்குதலுக்கு தயாராகும் காங்கிரஸ்

சோனியா, ராகுல் காந்தி. மம்தா பானர்ஜி | கோப்புப் படங்கள்

புதுடெல்லி

சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு தாவி வருவதால் மம்தாவுக்கு எதிராக கடும் தாக்குதலுக்கு காங்கிரஸ் தயாராகி வருகிறது.

திரிணமூல் காங்கிரஸுக்கு பதிலடி கொடுப்பதற்காகவே காங்கிரஸில் உயர்மட்டத் தலைவர்களின் குழு ஒன்றை காங்கிரஸ் நியமித்துள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, மும்பை பயணத்தின் போது, தேசியவாதக் காங்கிரஸ் மற்றும் சிவசேனா தலைவர்களை சந்தித்துப் பேசினார். அப்போது யுபிஏ (ஜனநாயக முற்போக்குக் கூட்டணி) பற்றி விமர்சித்து பேசினார்.

மகாராஷ்டிராவில் காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) தலைவர் சரத் பவாருடன் மும்பையில் நடந்த சந்திப்பிற்குப் பிறகு மம்தா "யுபிஏவா அப்படி ஒன்று இல்லை" என்று கூறிய கருத்து, பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

அதுமட்டுமின்றி மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், அனைத்து பிராந்திய கட்சிகளும் ஒன்றிணைந்தால், பாஜகவை தோற்கடிப்பது மிகவும் எளிதானது என்று மம்தா கூறினார்.

காங்கிரஸ் இன்றி பாஜகவை வீழ்த்த முடியாது

அதற்கு தலைமையில் கட்சியிலிருந்து வலுவான பதில்கள் அம்புகளாய் வரத்தொடங்கியுள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் வியாழனன்று தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில், “நூற்றாண்டு பழமையான காங்கிரஸ் கட்சி இல்லாத ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, ஆன்மா இல்லாத உடலாக இருக்கும். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் காட்ட வேண்டிய நேரம் இது” என்று காங்கிரஸ் தலைவர் ட்வீட் செய்துள்ளார்.

கபில் சிபல்

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஏஎன்ஐயிடம் கூறுகையில், ''காங்கிரஸ் இல்லாமல் பாஜகவை தோற்கடிப்பது வெறும் கனவு'' என்று தெரிவித்தார்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

உண்மையில், மம்தாவை விமர்சிக்கும் காங்கிரஸ் தலைவர்களில் முன்னணியில் இருப்பவர்
மக்களவைத் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிதான். ஏனெனில் இவர்தான் மேற்குவங்கத்தில் நடந்த தேர்தல்களில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக பழைய பகையை மனதில்கொண்டு மம்தாவை கடுமையாக தாக்கி வந்தார். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் இணைந்து போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மம்தா பானர்ஜி மற்றும் தேசியவாதக் காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இடையேயான சந்திப்பு, ''பழமையான காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்துவதற்காக முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி. பாஜகவின் ஆக்ஸிஜன் சப்ளையர் ஆகிவிட்டார் மம்தா'' என்றும் குற்றம் சாட்டினார்.

உறவும் பிரிவும்

திரிணாமூல் காங்கிரஸ் ஒரு காலத்தில் யுபிஏ அல்லது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒரு அங்கமாக இருந்தது, காங்கிரஸ் உட்பட பல கட்சிகளின் கூட்டணி, பாஜக ஆட்சிக்கு வந்த 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸின் அமோக வெற்றிக்குப் பிறகு, மம்தா தேசிய அளவில் வலுவான மாற்றாகத் தொடர்ந்து களமிறங்குகிறார், ஆனால் மறைமுகமாக காங்கிரஸை எதிர்கொள்கிறார்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி


சோனியாவை சந்திக்காத மம்தா

மம்தா 2024 மக்களவைத் தேர்தலில் தேசிய அளவிலான தனிக் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளார். அதற்கு முன்னதாக, ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணியில் ஈடுபடும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதன் முன்னெடுப்புதான் அவரது சமீபத்திய டெல்லி, மும்பை பயணங்கள். மும்பையில் பல்வேறு அரசியல் அமைப்புகளின் உயர்மட்ட தலைவர்களுடன் தொடர் சந்திப்புகளை நடத்தி வருகிறார்.

ஆனால், கடைசியாக டெல்லி சென்றபோது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவர் சந்திக்கவில்லை. சுவாரஸ்யமாக, இந்த ஆண்டு ஜூலை மாதம் தனது டெல்லி பயணத்தின் போது, ​​மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்தார்.

திரிணமூலில் சேரும் காங்கிரஸ் கட்சியினர்

"மேகாலயாவில் 17 எம்எல்ஏக்களில் 12 பேர் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்ததையடுத்து, அது மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியாக மாறியது, இந்த மாற்றம் காங்கிரஸுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. மேகாலயாவின் முன்னாள் முதல்வர் முகுல் சங்மாவும் திரிணமூல் கட்சியின் புதியவர்களில் முக்கியமானவர்.

கடந்த சில மாதங்களில் காங்கிரஸில் இருந்து விலகிய தலைவர்கள் பலரும் தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தனர். செப்டம்பரில், கோவாவின் முன்னாள் முதல்வர் லூயிசின்ஹோ ஃபலேரோ காங்கிரஸின் முதன்மை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் திரிணமூலில் இணைந்தார்.

ஃபலேரோ காங்கிரஸூக்கு தாவியதைத் தொடர்ந்து, காங்கிரஸில் இருந்து மேலும் ஒன்பது தலைவர்களும் திரிணமூலில் இணைந்தனர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
அசாமின் சில்சார் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பியும், அகில இந்திய மகிளா காங்கிரஸின் முன்னாள் தலைவருமான சுஷ்மிதா தேவ், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரிணமூலில் இணைந்தார்.

திரிபுராவில் திரிணமூல் காங்கிரஸ் விவகாரங்களைக் கவனிக்க அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிறகு லூயிசின்ஹோ ஃபலேரோ மற்றும் சுஷ்மிதா தேவ் இருவருக்கும் ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் கீர்த்தி ஆசாத் மற்றும் ஹரியாணா முன்னாள் காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வார் ஆகியோரும் சமீபத்தில் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தனர். தன்வர் ஒரு காலத்தில் ராகுல் காந்தியின் நெருங்கிய உதவியாளராக இருந்தார்.

இந்த தொடர் தாவல்கள்தான் காங்கிரஸின் மம்தாவுக்கு எதிரான புதிய எழுச்சிக்கு காரணமாக இருந்தது.

புதன்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்தில் மம்தாவை வீழ்த்துவது குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அக் கூட்டத்தின்போது காங்கிரஸ் உயர்மட்டத் தலைவர்களிடையே விவாதங்கள் நடந்தன, அதில் கட்சி வரும் தேர்தல்களில் மம்தாவுக்கு எதிராக பெரிய அளவிலான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், எதிர்க்கட்சிகள் ஒற்றுமை என்ற பெயரில் உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்பதே காங்கிரஸின் உத்தியாக இருந்து வருகிறது. கட்சியில் உள்ள ஒரு பிரிவினரும் நீண்ட நாட்களாக மம்தாவுடன் நல்லுறவுக்கு ஆதரவாக உள்ளனர்.

எனினும், மம்தா மீது அரசியல் தாக்குதல் நடத்தும் பொறுப்பு மல்லிகார்ஜுன் கார்கே, திக்விஜய சிங், ரண்ந்தீப் சுர்ஜேவாலா போன்ற உயர்மட்டத் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

திக் விஜய சிங்

காங்கிரஸை விட்டு வெளியேறிய ஜெகன் மோகன் ரெட்டி, சரத் பவார் மற்றும் கே.சந்திரசேகர் ராவ் போன்ற தலைவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று திக்விஜய சிங் வெளிப்படையாக வாதிட்டதால் அவருக்கு சிறப்புப் பொறுப்பு வழங்கப்பட்டது.

மம்தாவைக் குறிவைத்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி.ஸ்ரீனிவாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ''மோடிஜியிடம் எந்தக் கேள்வியும் கேளுங்கள், நீங்கள் தேசத்துரோகி என்று அழைக்கப்படுவீர்கள்.. மம்தாவிடம் எந்தக் கேள்வியையும் கேளுங்கள், நீங்கள் மாவோயிஸ்ட் என்று அழைக்கப்படுவீர்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?'' என்று தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x