Published : 02 Dec 2021 12:33 PM
Last Updated : 02 Dec 2021 12:33 PM

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியே இல்லையே: மம்தா பானர்ஜி கிண்டல்

மும்பையில் நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசிய காட்சி

மும்பை

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) நீண்டகாலமாகவே இல்லையே என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மே.வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மகாராஷ்டிரா மாநிலத்துக்கு 3 நாட்கள் பயணமாகப் சென்றிருந்தார்.அதில் நேற்றுமுன்தினம் சிவசேனா கட்சித் தலைவரும், உத்தவ் தாக்கரே மகனுமான ஆதித்யா தாக்கரேவையும், மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தையும் மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார். முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்துப் பேசப்போவதாக மம்தா பானர்ஜி முதலில் தெரிவித்திருந்தநிலையில் உத்தவ் தாக்கரேவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சந்திப்பு ரத்தானது.

இதற்கிடையே நேற்றுப் பிற்பகலில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட மூத்த தலைவர்களை மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப்பின் இருவரும் கூட்டாக நிருபர்களுக்குப் பேட்டி அளித்தனர். அப்போது மம்தா பானர்ஜி கூறுகையில் “ நானும், மற்ற கட்சியினருடன் சேர்ந்து பாஜகவுக்கு எதிராகப் போரிடத் தயாராக இருக்கிறேன்.

ஆனால், சிலர் விருப்பமில்லாமல் இருக்கும்போது, என்னால் ஒன்றும் செய்ய முடியாது. நாட்டில் அதிகரித்துவரும் பாசிஸத்துக்கு எதிராக வலிமையான மாற்று தேவை என்று நான் நம்புகிறேன். நான் மட்டும் தனியாக முடியாது. யாரெல்லாம் வலிமையாக இருக்கிறார்களோ, எங்கிருந்தாலும் இதைச் செய்யலாம். சரத்பவார் மூத்த தலைவர், அவருடன் நான் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். அதனால்தான் அவருடன் சில விஷயங்கள் குறித்து ஆலோசித்தேன்” எனத் தெரிவித்தார்

பாஜகவுக்கு எதிராக போராடும்போது காங்கிரஸ் நீக்கப்படுகிறதா என நிருபர்கள் கேட்டபோது அதற்கு சரத் பவார் “ இதில் யாரையும் நீக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒவ்வொருவரையும் அரவணைத்துச் செல்லவே பேச்சு நடக்கிறது. யாரெல்லாம் கடினமாக பணியாற்ற விருப்பமாக இருக்கிறார்களோ மற்றவர்களுடன் கைகோர்த்து இணைந்து செல்லலாம்” எனத் தெரிவித்தார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு யார் தலைமை ஏற்பது சரத்பவார் ஏற்பாரா என்று நிருபர்கள் கேட்டபோது, அதற்கு மம்தா பானர்ஜி “ எந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி பற்றி பேசுகிறீர்கள். ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்பது இல்லை. வலிமையான மாற்று கூட்டணியை உருவாக்க முயன்று வருகிறோம். நாம் பாஜகவுக்கு எதிராக கண்டிப்பாகப் போராட வேண்டும். சிலர் போராடாதபோது நாம் என்ன செய்யமுடியும். நாம் போராட வேண்டும்” எனத் தெரிவித்தார்

சரத் பவார் பேசுகையில் “ நானும் எனது கட்சியினரும் நீண்ட ஆலோசனை நடத்தினோம். பாஜகவுக்கு எதிராக ஒருமித்த எண்ணம் கொண்ட கட்சிகளை ஒரு தளத்தில் கொண்டுவந்து கூட்டுப்பொறுப்பு ஏற்க வேண்டும் என்பது மம்தாவின் விருப்பம். இந்த கூட்டணி வரும் 2024- ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்நிறுத்தி அதற்கு முன்பே உருவாக்க வேண்டும். எங்கள் சந்திப்பு சாதகமாகவே இருந்தது. பாஜகவுக்கு எதிராக இருப்போர் அனைவரும் தீவிரமான எண்ணங்களுடன் வரலாம். இதில் எந்தக் கட்சிக்கும் தனி முக்கியத்துவம் என்பது இல்லை அனைவரும் முக்கியமானவர்கள்தான். “ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x