Published : 09 Mar 2016 07:18 PM
Last Updated : 09 Mar 2016 07:18 PM
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பின் கலாச்சார விழா யமுனா நதிக்கரையில் நடைபெறலாம், ஆனால் முதற்கட்டமாக ரூ.5 கோடி இழப்பீட்டுத் தொகையாக செலுத்த வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் யமுனை நதிக்கரை யில், வாழும் கலை அமைப்பு சார்பில் வரும் 11-ம் தேதி உலக கலாச்சார விழா தொடங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார் எனவும், நிறைவு நாளில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு சுற்றுச்சூழல் மற்றும் தன்னார்வ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நிகழ்ச்சிக்கு தடை கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கூடுதல் இழப்பீடு அபராதம் மற்றும் யமுனை நதிக்கரை மீட்புத் திட்டம் ஆகியவை பற்றி பிற்பாடு அறிவிக்கப்படும் என்று பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
யமுனையில் உள்ள அசுத்த நீரை சுத்திகரிப்பதற்காக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நொதிப்பான்களை (என்ஸைம்) 17 இடங்களில் நீரில் மிதக்கவிட முடிவு செய்துள்ள னர். இவை, அறிவியல் ரீதியாக பரிசோதிக்கப்படாதவை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கு அமைக்கப்படும் மேடைகள், தடுப்புகளால் நதிச் சமவெளி பாதிக்கப்படும் என குற்றம்சாட்டுகள் எழுந்தன.
மேலும், டெல்லி நகர மேம்பாட்டு ஆணையத்துக்கு ரூ.5 லட்சம் அபராதமும், டெல்லி மாசுக்கட்டுப்பாட்டு கமிட்டிக்கு ரூ.1 லட்சம் அபராதமும் பசுமைத் தீர்ப்பாயம் விதித்துள்ளது. சட்ட ரீதியான கடமைகளை ஆற்றவில்லை என்பதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
யமுனை நதியில் நொதிப்பான்களை (என்சைம்) மிதக்க விட மாட்டோம் என்பதையும் சுற்றுசூழலுக்கு மேலும் பாதிப்புகள் ஏற்படாது என்பதையும் வியாழக்கிழமை வாழும் கலை அமைப்பு உறுதி செய்ய வேண்டும் என்று பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கலாச்சார நிகழ்வு தொடங்கும் முன்னதாக இழப்பீட்டுத் தொகை டெபாசிட் செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT