Published : 30 Nov 2021 06:18 PM
Last Updated : 30 Nov 2021 06:18 PM
கரோனா வைரஸின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் மூலம் 3-வது அலை உருவாகக் கூடும். அதை எதிர்கொள்ள டெல்லி அரசு தயாராகி வருகிறது என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.
தென் ஆப்பிரிக்காவில்தான் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட கரோனா வைரஸின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வகை வைரஸ் அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல், பிரிட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் கண்டறியப்பட்டது.
இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும், அறிகுறிகள் தீவிரத்தன்மை கொண்டதாகவும் இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
உலக அளவில் இந்த வைரஸ் குறித்த அச்சம் எழுந்ததையடுத்து, ஜப்பான், இஸ்ரேல், உள்ளிட்ட நாடுகள் முற்றிலுமாக சர்வதேச விமானப் போக்குவரத்தை நிறுத்தி, வெளிநாட்டினர் வருவதற்குத் தடை விதித்தன. ஐரோப்பிய யூனியனில் உள்ள பல நாடுகள், தென் ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள பல நாடுகளுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளன. அங்கிருந்து வருவோருக்குத் தடையும் விதித்துள்ளன.
இந்திய அரசும் இதை உணர்ந்து, ஒமைக்ரான் பாதிப்பு உள்ள எச்சரிக்கைப் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து பயணிகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சர்வதேச விமானப் போக்குவரத்தைத் தடை செய்யக் கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பிரதமர் மோடிக்குக் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், மத்திய அரசு இதுவரை விமான நிலையங்களில் பரிசோதனையை மட்டும் தீவிரப்படுத்தியுள்ளது. விமானங்களைத் தடை செய்யவில்லை.
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''ஒமைக்ரான் வகை வைரஸால் 3-வது அலை உருவாகும் என நம்புகிறோம். இதை எதிர்கொள்ளும் விதமாக 30 ஆயிரம் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளைத் தயார் செய்து வருகிறோம். ஆக்ஸிஜன் சப்ளை, அதைச் சேமிக்கும் வசதியையும் அதிகப்படுத்தி வருகிறோம். ஒமைக்ரான் வைரஸால் பல அச்சுறுத்தல்கள் வரலாம்.
இவை தவிர ஐசியு வசதி கொண்ட 10 ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளன. பிப்ரவரி மாதத்துக்குள் கூடுதலாக 6,800 ஐசியு படுக்கைகள் தயாராகிவிடும். இது தவிர இரு மாதங்களுக்குச் சேமித்து வைக்கும் வகையில் 32 வகையான மருந்துகளை டெல்லி அரசு ஆர்டர் செய்துள்ளது”.
இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்.
கரோனா 2-வது அலையின்போது ஏப்ரல், மே மாதங்களில் டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. ஏராளமான மக்கள் சிரமப்பட்டனர். ஆதலால், கூடுதல் சேமிப்பு வசதிகளை உருவாக்கும் வகையில் 442 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனைச் சேமிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஜெர்மனியிலிருந்து டெல்லி வந்த ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவரிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு, மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பரிசோதனையின் முடிவுகள் வந்தபின்புதான் ஒமைக்ரான் பாதிப்பு குறித்து தெரியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT