Published : 30 Nov 2021 12:25 PM
Last Updated : 30 Nov 2021 12:25 PM
12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் அத்துமீறி நடந்து கொண்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் இந்த குளிர்காலக் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவித்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19-ம் தேதி தொடங்கியதில் இருந்து பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம், வேளாண் சட்டங்கள் விவகாரம் ஆகியவற்றை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியிலும், கூச்சல் குழப்பம் விளைவித்து வந்தன.
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. மேஜையின் மீது ஏறி போராட்டம் நடத்தினர். ஆகஸ்ட் 11-ம் தேதி மாநிலங்களவையில் பேசிய அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக மறுநாள் அவையில் கண்ணீர் விட்டார்.
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சாயா வெர்மா, ஆர். போரா, ராஜாமணி பட்டீல், சையத் நசீர் ஹுசைன், அகிலேஷ் பிரசாத் சிங், சிவசேனை கட்சியைச் சேர்ந்த எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. டோலா டென் உள்ளிட்ட 12 எம்.பி.க்கள் மாநிலங்களவையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று கூடி ஆலோசனை நடத்தினர்.
இதனிடையே நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பதிவிட்டுள்ளார். அதில் அவர் மன்னிப்பு கோரினால் இடைநீக்க உத்தரவை திரும்ப பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்தநிலையில் மாநிலங்களவை இன்று காலை கூடியதும், 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் பிரச்சினை எழுப்பினர். விதி 256ன் கீழ், 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் வீதி மீறப்பட்டுள்ளதாக மல்லிகார்ஜுன் கார்கே கூறினார்.
ஆனால் 12 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யும் முடிவை திரும்பப் பெற வாய்ப்பில்லை என அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதனால் 12 எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ், திமுக, ஆர்ஜேடி, இடதுசாரிகள் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் எம்.பி.க்கள், தங்கள் கோரிக்கையை அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஏற்காததால் வெளிநடப்பு செய்தனர். திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் தொடர்ந்து அவையில் அமர்ந்து இருந்தனர்.
மக்களவையிலும் இதே பிரச்சினைக்காக காங்கிரஸ் எம்.பி.க்கள் அவை நடவடிக்கையை புறக்கணித்தனர். இதனால் ஏற்பட்ட அமளியை தொடர்ந்து மக்களவை பிற்பகல் 2.00 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்கட்சித் தலைவர்கள் கூட்டாக சென்று மகாத்மா காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT