Published : 30 Nov 2021 12:13 PM
Last Updated : 30 Nov 2021 12:13 PM

பிரதமர் மோடிக்குப் பின்னால் ஏதோ சக்தி ஆட்டுவிக்கிறது; நோக்கத்தில் சந்தேகமிருக்கிறது: ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரதமர் மோடி | கோப்புப்படம்

புதுடெல்லி

3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் மசோதாக்களை எந்தவிதமான விவாதமும் இன்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதன் மூலம் மத்திய அரசு அச்சமடைந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது. தாங்கள் தவறு செய்துவிட்டோம் எனத் தெரிந்துகொண்டார்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கடந்த ஓராண்டாக விவசாயிகள் நடத்திய தீவிரப் போராட்டம் காரணமாக அந்தச் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெறுவதாக அறிவித்தது.

குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய முதல் நாள் அமர்விலேயே மக்களவையிலும், மாநிலங்களவையிலும் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, எந்தவிதமான விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் மசோதாக்களை எந்தவிதமான விவாதமும் இன்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதன் மூலம் மத்திய அரசு அச்சமடைந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது. தாங்கள் தவறு செய்துவிட்டோம் எனத் தெரிந்துகொண்டார்கள்.

விவாதம் ஏதும் இன்றி நாடாளுமன்றம் நடத்துவதாக இருந்தால், நாடாளுமன்றத்தை மூடிவிடுவது சிறந்தது. பிரதமர் மோடிக்குப் பின்னால் ஏதோ சக்தி ஆட்டுவிக்கிறது என நினைக்கிறேன். இது தேசத்தின் எதிர்காலத்துக்கு ஆபத்தானது, அதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இந்த 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றதற்கு முக்கியக் காரணம் விவசாயிகளின் போராட்டம்தான். விவசாயிகளின் வெற்றி, தேசத்தின் வெற்றி. விவசாயிகள், தொழிலாளர்களின் வலிமை முன் 4 பெரும் கோடீஸ்வர்கள் நிற்க முடியவில்லை என்பதைக் காட்டுகிறது.

வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டவுடனே இந்தச் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று நானும் எனது கட்சியும் முன்கூட்டியே தெரிவித்தோம். ஏனென்றால், குறிப்பிட்ட சில முதலாளிகளுக்காக நிறைவேற்றப்பட்ட சட்டம். தொழிலாளர்கள், விவசாயிகள் முன் அவர்களால் நிற்க முடியாது.

ஆனால், எந்தவிதமான விவாதமும், ஆலோசனையும் இன்றி இந்த மசோதாக்கள் திரும்பப் பெறப்பட்டதுதான் துரதிர்ஷ்டம். இந்த மசோதாக்களுக்குப் பின்னால் இருந்தவர்கள் யார் என்பது குறித்து விவாதிக்க நினைத்தோம்.

இந்த மசோதாக்கள் பிரதமர் மோடியை மட்டும் பிரதிபலிக்கவில்லை. அவருக்குப் பின்னால் இருக்கும் ஏதோ ஒரு சக்தியை, சக்திவாய்ந்தவர்களை, அந்தச் சக்தியைக் குறிப்பிடுகிறது. இந்த மசோதாக்களைக் கொண்டுவரத் தூண்டியவர்கள் யார் என்பதை விவாதிக்க வேண்டும். இந்த மசோதாக்களுக்குப் பின்புலத்தில் இருந்தவர்கள் யார் என்பதை அறிய வேண்டும்.

விவசாயிகளின் வேளாண் பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை, லக்கிம்பூர் கெரி சம்பவம், போராட்டத்தில் 700 விவசாயிகள் மரணம் ஆகியவை குறித்து விவாதிக்க விரும்பினோம். ஆனால், விவாதத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.

இதன் மூலம் மத்திய அரசு விவாதத்துக்கு அஞ்சிவிட்டது தெரிகிறது. எதையோ மத்திய அரசு மறைக்க முயல்கிறது. விவாதங்களைச் சந்திக்கும் துணிச்சல் மத்திய அரசுக்கு இல்லை என்பது துரதிர்ஷ்டம்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றதன் முக்கிய நோக்கமே அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. அதை மனதில் வைத்து மத்திய அரசு செயல்பட்டுள்ளது. போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிரிழந்ததை பிரதமர் மோடி ஏற்றுக்கொள்கிறார் என்பதைத்தான் அவரின் மன்னிப்பு வெளிப்படுத்துகிறது. அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

மத்திய அரசின் நோக்கம் இன்னும் எனக்கு சந்தேகமாக இருக்கிறது. மத்திய அரசின் நோக்கம் மோசமாக இருக்கிறது. சில சக்திகளின் கைப்பாவையாக பிரதமர் செயல்படுகிறார். இது தனிப்பட்ட சம்பவம் அல்ல. ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் குறிப்பிட்ட சக்திகள் கைப்பற்றி வேளாண் மசோதாக்களைத் திணித்ததும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டுவந்ததும் இந்த சக்திகள்தான். மோசமான ஜிஎஸ்டி வரிவிதிப்பைக் கொண்டுவந்ததும் இவர்கள்தான். கரோனா காலத்தில் ஏழைகளுக்குப் பணமும் வழங்க முடியவில்லை.

என்னுடைய கேள்வி என்பது வேளாண் சட்டங்களை மீண்டும் மத்திய அரசு நிறைவேற்ற முயலுமா என்பதல்ல. தேசத்தின் ஏழை மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்பட ஒரு குழுவால் மத்திய அரசு கைப்பற்றப்பட்டுள்ளதா என்பதுதான் எனது கேள்வி. தேசத்தின் ஏழை மக்களின் எதிர்காலத்தைக் கெடுக்க என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள்.

பிரதமர் மோடி ஏன் மன்னிப்பு கோருகிறார். எதற்காக மன்னிப்பு கோருகிறார். விவசாயிகளுக்கு எதிராக ஏதும் செய்யாவிட்டால் ஏன் மன்னிப்பு கோரினார். யார் சார்பில் மன்னிப்பு கோரினார்?''

இவ்வாறு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x