Published : 30 Nov 2021 10:23 AM
Last Updated : 30 Nov 2021 10:23 AM
பிரதமரின் ஜன்தன் திட்ட முதலீடு ரூ.1,48,069 கோடி கையிருப்புடன் கணக்குகளின் எண்ணிக்கையும் 43.85 கோடியாக அதிகரித்துள்ளது.
பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் கீழ், கோவிட்-19 ஊரடங்கிற்கு முன்பு 25.03.2020 அன்றைய நிலவரப்படி, 38.33 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டு, ரூ.1,18,434 கோடி முதலீட்டுக் கையிருப்பாக இருந்த நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு, 10.11.2021 நிலவரப்படி, கணக்குகளின் எண்ணிக்கை 43.85 கோடியாகவும், முதலீட்டுக் கையிருப்பு ரூ.1,48,069 கோடியாகவும் அதிகரித்துள்ளது.
மத்திய நிதித்துறை இணையமைச்சர் டாக்டர் பகவத் கிஷன்ராவ் காரத், மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள அவர், வங்கிகளின் நிர்வாக வாரியம் ஒப்புதல் அளித்துள்ள கொள்கைகளுக்கேற்ப, ஜன் தன் கணக்குகள் உட்பட அனைத்து சேமிப்புக் கணக்குகளுக்கும், முதலீட்டிற்கு உரிய வட்டி வழங்கப்படுவதால், ஜன் தன் கணக்குகளுக்கு என தனியாக வட்டி வழங்குவது குறித்து அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் காரத், 2018 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில், சிறு, குறு விவசாயிகள் மற்றும் ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு கடன் வழங்குவதில், மண்டல கிராமிய வங்கிகள் இலக்கைத் தாண்டி சாதனை படைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
வேறு ஒரு கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்துள்ள நிதித்துறையின் மற்றொரு இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, 2021-22 நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வசூல், தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.1,39,708 கோடியாக இருந்த ஜி.எஸ்.டி. வசூல், அக்டோபர் மாதத்தில், 1,30,127 கோடியாக இருந்ததாக கூறியுள்ளார்.
கோவிட் பெருந்தொற்று பாதிப்பால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாக, ஜி.எஸ்.டி. வசூல் குறைந்ததால், அதிக இழப்பீடு வழங்க நேரிட்டதாகவும் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். ஏப்ரல்’ 2020 முதல் மார்ச்‘2021 வரையிலான நிதியாண்டிற்கு, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.1,30,464 கோடி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தமது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 41 மற்றும் 42-வது கூட்டங்களின் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, 2020-21 நிதியாண்டில் மத்திய அரசு வழங்கிய இழப்பீட்டில் ஏற்பட்ட குறைவை ஈடுகட்ட, மத்திய அரசு வெளிச்சந்தையில் ரூ.1.1 லட்சம் கோடி கடன் திரட்டி, அதனை மாநிலங்களுக்கு வழங்கியதுடன், 43-வது கூட்ட முடிவின்படி, ரூ.1.59லம்கோடி கடன் வாங்கி, அதனை மாநிலங்களுக்கு வழங்கியிருப்பதாகவும் பங்கஜ் சவுத்ரி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT