Published : 30 Nov 2021 09:38 AM
Last Updated : 30 Nov 2021 09:38 AM
இந்தியாவில் இதுவரை 130 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுவிட்டது. இந்நிலையில், 12 வயது முதல் 17 வயது வரை உள்ள 44 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்தும், நோய் எதிர்ப்பாற்றல் இல்லாதோருக்கு பூஸ்டர் டோஸ் போடுவது குறித்து இன்னும் இரண்டு வாரங்களில் கொள்கை முடிவு வகுக்கப்படும் என தடுப்பூசி திட்டத்திற்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் மருத்துவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆங்கில தொலைக்காட்சிக்கு மருத்துவர் என்.கே.அரோரா அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:
பல நாடுகளிலும் பூஸ்டர் டோஸ் கொடுக்கப்படுகின்றன. இந்தியாவின் பூஸ்டர் டோஸ் வழங்குவது என்றால் அதற்கு மட்டுமே 94 கோடி டோஸ் தேவைப்படும். இந்தியாவில் இப்போதைக்கு கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை. இருந்தாலும், இன்னும் நாட்டில் 12 முதல் 15 கோடி மக்கள் ஒரு டோஸ் தடுப்பூசி கோட போடாமல் உள்ளனர், 30 கோடி பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. இப்போதைக்கு முன்னுரிமை அடிப்படையில் இவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். இருப்பினும் பூஸ்டர் டோஸ் பற்றி இன்னும் இரண்டு வாரங்களில் புதிய கொள்கை வகுக்கப்படும்.
அதுமட்டுமல்லாமல் புதிய உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவல் குறித்தும் அதன் தடுப்பூசி எதிர்ப்புத்திறன் என்னவென்பது குறித்தும் ஆராயப்பட வேண்டியுள்ளது. இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை. தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூரூவுக்கு வந்த இருவரில் ஒருவருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பும் மற்றொருவருக்கு டெல்டாவைத் தவிர்த்து வித்தியாசமான வைரஸும் தாக்கியுள்ளது உறுதியாகியுள்ளது. கர்நாடக அரசு அது குறித்து ஆய்வு செய்து வருகிறது.
இத்தகைய சூழலில், குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்தும், நோய் எதிர்ப்பாற்றல் இல்லாதோருக்கு பூஸ்டர் டோஸ் போடுவது குறித்து இன்னும் இரண்டு வாரங்களில் கொள்கை முடிவு வகுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்தியாவில் கடந்த ஜனவரி 2021 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளை அரசாங்கம் வழங்குகிறது. தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுடன் ஸ்புட்னிக் V தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT