Published : 29 Nov 2021 04:33 PM
Last Updated : 29 Nov 2021 04:33 PM

பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்பில்லை: காரணம் என்ன?

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

சர்வதேச சந்தையில் தற்போது குறைந்திருக்கும் கச்சா எண்ணெய் விலை இன்னும் சில நாட்களுக்கு நீடித்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால், இப்போதுள்ள நிலையில் விலை குறைய வாய்ப்பு குறைவு.

உள்நாட்டில் பெட்ரோல், டீசல் சில்லறை விலை என்பது சர்வதேச சந்தையில் கடைசி 15 நாட்கள் சராசரி அடிப்படையில்தான் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. ஆனால், கடந்த 15 நாட்களாக கச்சா எண்ணெய் விலை குறையவில்லை. அதாவது நவம்பர் 25-ம் தேதி வரை கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 80 முதல் 82 டாலருக்கு விற்பனையாகி வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்துதான் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 4 டாலர் குறைந்துள்ளது. அமெரிக்கச் சந்தையில் பிரண்ட் கச்சா எண்ணெயும் பேரல் ஒன்றுக்கு 6 டாலர் குறைந்து 72.91 டாலராகச் சரிந்தது. ஆதலால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயில் ஏற்பட்ட இந்த விலைச் சரிவு இன்னும் சில நாட்கள் நீடிக்க வேண்டும்.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் அச்சத்தால் கச்சா எண்ணெய் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது. கரோனா முதல் அலையைப் போன்று பொருளாதார வளர்ச்சியை பாதிக்குமா, தேவை குறையுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்றவை சர்வதேச சந்தையில் கடந்த 15 நாட்கள் விலையின் சராசரி அடிப்படையில்தான் நிர்ணயிக்கின்றன.

ஆனால், கடந்த 15 நாட்களில் கடந்த 4 நாட்களாகத்தான் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கி இருப்பதால், இப்போதைக்கு பெட்ரோல், டீசல் விலையில் குறைப்பு இருக்காது. ஆனால், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட இந்த விலைச் சரிவு இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் நீடித்தால், அடுத்துவரும் வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

கச்சா எண்ணெயை அதிகமாகப் பயன்படுத்தும் அமெரிக்கா, ஜப்பான் தென்கொரியா, இந்தியா ஆகிய நாடுகள் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் குறையட்டும் என்பதற்காக தங்களின் இருப்பிலிருந்து எண்ணெயை எடுக்கத் தொடங்கியுள்ளன.

கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பு டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ஆலோசனைக் கூட்டம் நடத்த இருக்கின்றன. அந்தக் கூட்டத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க முடிவு எடுத்தால், விலை மீண்டும் அதிகரிக்கும்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை முறையே ரூ.5, ரூ.10 எனக் கடந்த 5-ம் தேதி மத்திய அரசு குறைத்தது. அதன்பின் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x