Published : 29 Nov 2021 11:35 AM
Last Updated : 29 Nov 2021 11:35 AM

முதல் நாளிலேயே கடும் அமளி: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம்; மக்களவை 12 மணிவரை ஒத்திவைப்பு

புதுடெல்லி

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் முதல் நாளிலேயே மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், முதல்நாளிலேயே மக்களவையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகவே அனைத்து எம்.பி.க்களையும் முதல்நாளில் வர வேண்டும் என்று பாஜக கொறடாமூலம் உத்தரவிட்டுள்ளது.

இதுபோலவே கிரிப்டோ கரன்ஸி, டிஜிட்டல் கரன்ஸியை ஒழுங்குமுறைப்படுத்தும் மசோாதா, திவால் சட்டத்தில் 2-வது திருத்த மசோதா, மின்சாரத் திருத்த மசோதாவும் தாக்கல் செய்யப்படலாம் எனத் தெரிகிறது

இதனால் அதேபோல காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தங்கள் எம்.பி.க்கள் தவறாது இன்று அவைக்கு வர வேண்டும் என கொறடா மூலம் உத்தரவி்ட்டுள்ளனர்.

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டாலும், விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்தநிலையில் மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாடு உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பது தொடர்பாகவும், மக்கள் விரோத மசோதாக்கள் தாக்கல் செய்யாமல் தடுப்பது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக அமளியில் ஈடுபட்டன. சபாநாயகரின் இருக்கை அருகே கூடிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x