Published : 27 Nov 2021 03:21 PM
Last Updated : 27 Nov 2021 03:21 PM
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் குழந்தைகளுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயமில்லை என்று கேரள அரசு விளக்கம் அளித்துள்ளது.
பத்தினம்திட்டா மாவட்டம் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மகரவிளக்கு, மண்டல பூஜை சீசன் கார்த்திகை மாதத்திலிருந்து தொடங்கியுள்ளது. தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து, மாலையணிந்து சபரிமலைக்கு வருவார்கள்.
கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் முயற்சியாக பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது கரோனா தடுப்பூசி சான்றிதழை இணைக்க வேண்டும், தரிசனத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்று வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விதிகள் குழந்தைகளுக்கும் பொருந்துமா, குழந்தைகளுக்கும் கட்டாய ஆர்டி-பிசிஆர் பரிசோதனை எடுக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. சில அதிகாரிகள் குழந்தைகளுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறி கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்த சம்பவங்களும் நடந்தன.
இதையடுத்து,கேரள அரசு ஐயப்ப பக்தர்களுக்கு விளக்கம் அளித்துள்ளது. அதில், ''சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் குழந்தைகளுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயமில்லை. குழந்தைகளை அழைத்துவரும் பெற்றோர், காப்பாளர் குழந்தைகளுக்குத் தேவையான சோப்பு, சானிடைசர், முகக்கவசம் கண்டிப்பாக கொண்டுவர வேண்டும்.
குழந்தைகளின் உடல்நலத்துக்கும் அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். கோயிலில் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திய சான்றிதழ், மற்றும் 72 மணி நேரத்துக்கு கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்று வைத்திருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT