Published : 27 Nov 2021 12:25 PM
Last Updated : 27 Nov 2021 12:25 PM
ஒமைக்ரான் வகை உருமாற்ற கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு விமான சேவையை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல் முறையாக இந்த ஒமைக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.
இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக இந்த வைரஸ் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். இந்த வகை வைரஸ் தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டவை, வேகமாகப் பரவும், கரோனாவின் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.
ஒமைக்ரான் வைரஸ் அச்சத்தால் உலக நாடுகள் பல பயணக் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதேபோன்று இந்தியாவும், தென் ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பது, அல்லது விமானங்களைத் தடை செய்வது குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
ஹாங்காங், இஸ்ரேலில் இருந்துவரும் பயணிகளுக்குக் கூடுதலான பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக இந்தியாவுக்கு வந்தபின் அந்தப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனையும், தனிமைப்படுத்துதலும் தேவை குறித்துக் கூட்டத்தில் பேசப்படும் எனத் தெரிகிறது
தென் ஆப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூஸிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், இஸ்ரேல், ஹாங்காங், ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றிலிருந்து இந்தியா வரும் பயணிகள் கூடுதல் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிப்பது குறித்தும் முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது
இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார். அதில், “ஒமைக்ரான் எனும் புதிய உருமாற்ற கரோனா வைரஸால் பாதிப்புக்கு ஆளான நாடுகளில் இருந்தும், அந்த நாடுகளுக்கும் உடனடியாக விமான சேவையை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். கரோனாவிலிருந்து பெரும் இடர்ப்பாடுகள், சிரமங்களுக்குப் பின் நம் தேசம் விடுபட்டுள்ளது. இந்தியாவுக்குள் புதிய உருமாற்ற கரோனா வைரஸ் வராமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையாக அனைத்து நடவடிக்கைளையும் எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT