Published : 27 Nov 2021 11:42 AM
Last Updated : 27 Nov 2021 11:42 AM
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பெரும் அச்சத்தை ஆய்வாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதையடுத்து, அந்த வைரஸ் குறித்தும், தடுப்பூசி குறித்தும் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டம் காலை 11 மணி அளவில் தொடங்கி நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 10,549 ஆகக் குறைந்துவிட்டது. கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1.10 லட்சமாகக் குறைந்துவிட்டது. ஒட்டுமொத்த பாதிப்பில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின் இந்த அளவு குறைந்திருப்பது இதுதான் முதல் முறையாகும். நாடு முழுவதும் இதுவரை 120.27 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும், பாதிப்பிலிருந்து காக்கவும், உயிரிழப்பைத் தடுக்கவும் தடுப்பூசி முக்கியம். ஆதலால், தடுப்பூசி செலுத்தப்படுவதை வேகப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்படும் எனத் தெரிகிறது.
இது தவிர தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸால் உலக நாடுகள் பல பயணக் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதேபோன்று இந்தியாவும், தென் ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பது, அல்லது விமானங்களைத் தடை செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. விமானப் பயணத்துக்கு முன்பாக கரோனா நெகட்டிவ் சான்றிதழ், இந்தியாவுக்கு வந்தபின் பயணிகளுக்கு பரிசோதனையைத் தீவிரப்படுத்துதல் குறித்தும் பேசப்படும்.
ஹாங்காங், இஸ்ரேலில் இருந்துவரும் பயணிகளுக்கு கூடுதலான பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், குறிப்பாக இந்தியாவுக்கு வந்தபின் அந்தப் பயணிகளுக்கு கரோனா பரிசோதனையும், தனிமைப்படுத்துதலும் தேவை குறித்துக் கூட்டத்தில் பேசப்படும் எனத் தெரிகிறது
தென் ஆப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூஸிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், இஸ்ரேல், ஹாங்காங், ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றிலிருந்து இந்தியா வரும் பயணிகள் கூடுதல் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படலாம்.
இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக ஒமைக்ரான் வைரஸ் இருப்பதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவிக்கிறார்கள். குறிப்பாக போட்ஸ்வானா நாட்டில் இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்குக் கூட இந்தப் புதிய வைரஸ் தாக்கியுள்ளது. இந்த வகை வைரஸ், தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை கொண்டவை, வேகமாகப் பரவும், கரோனாவின் அறிகுறிகளும் தீவிரத்தன்மை கொண்டதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். இதனால்தான் மத்திய அரசு கூடுதல் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT