Last Updated : 10 Mar, 2016 06:22 PM

 

Published : 10 Mar 2016 06:22 PM
Last Updated : 10 Mar 2016 06:22 PM

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஐஆர்என்எஸ்எஸ்-1எப்

வாகன கண்காணிப்பு, விமானப் போக்குவரத்து மேலாண்மை, கடல் ஆராய்ச்சி, மீனவர்களின் கடல் பயணம் ஆகியவற்றுக்கு உதவும் ஐஆர்என்எஸ்எஸ் 1எப் செயற்கைக் கோள் பிஎஸ்எல்வி சி32 ராக்கெட் மூலம் வியாழக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) பல்வேறு ஆராய்ச்சிகளுக்காக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. பிரத்யேக கடல் ஆராய்ச்சிக்காக 7 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டது. அதன்படி, ஐஆர்என்எஸ்எஸ் 1ஏ செயற்கைக் கோள் 2013 ஜூலை மாதமும், 1பி செயற்கைக் கோள் 2014 ஏப்ரலிலும், 1சி செயற்கைக் கோள் அக்டோபரிலும், 1டி செயற்கைக் கோள் 2015 மார்ச்சிலும், 1இ செயற்கைக் கோள் 2016 ஜனவரி யிலும் விண்ணில் செலுத்தப் பட்டன.

இந்த வரிசையில் 6-வதான ஐஆர்என்எஸ்எஸ் 1எப் செயற் கைக் கோள் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி32 ராக்கெட் மூலம் மார்ச் 10-ம் தேதி மாலை 4 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான 54 மணி நேர கவுன்ட் டவுன் 8-ம் தேதி காலை தொடங்கியது.

ஒரு நிமிடம் தாமதம்

ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலை யில், சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள இஸ்ரோ கட்டுப் பாட்டு அறையில் இருந்தபடி ராக்கெட் ஏவுவதற்கான ஏற்பாடு களை விஞ்ஞானிகள் நேற்று கண்காணித்தனர். அப்போது, விண்வெளி கழிவுகள் மீது செயற்கைக் கோள் மோதும் அபாயம் இருப்பதை அறிந்த விஞ்ஞானிகள் ஒரு நிமிடம் தாமதமாக ராக்கெட்டை இயக்க முடிவு செய்தனர். அதன்படி சரியாக 4.01 மணிக்கு ஐஆர்என்எஸ்எஸ் 1எப் செயற்கைக் கோளை சுமந்துகொண்டு, பிஎஸ்எல்வி சி32 ராக்கெட் தீப்பிழம்பை கக்கியபடி வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது.

திட்டமிட்டபடி 20 நிமிடம் 11 விநாடியில், பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கி.மீ., அதிக பட்சம் 20,657 கி.மீ. கொண்ட புவிவட்டப் பாதையில் ஐஆர்என்எஸ்எஸ் 1எப் செயற்கைக் கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. 1,425 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக் கோள் நம் நாட்டிலேயே உருவாக்கப்பட்டதாகும்.

செயற்கைக் கோளின் பயணம் வெற்றிகரமாக அமைந்ததை அடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் பரஸ்பரம் கைகுலுக்கியும், கட்டியணைத்தும் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். அவர்களுக்கு இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் வாழ்த்து தெரிவித்தார்.

திட்ட இயக்குநர் பி.ஜெயக்குமார் பேசியபோது, ‘‘அனைத்து விஞ்ஞானிகளும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியதால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இத்திட்டம் வெற்றிபெற உழைத்த அனைவருக்கும் நன்றி’’ என்றார். ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் இஸ்ரோ மைய இயக்குநர் குன்னி கிருஷ்ணன், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் கே.சிவன், பெங்களூரு விண்வெளி கட்டுப்பாட்டு மைய இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

12 ஆண்டுகள் செயல்படும்

12 ஆண்டு ஆயுள் கொண்ட ஐஆர்என்எஸ்எஸ் 1எப் செயற்கைக்கோள் தரைவழி, கடல்வழி, வான்வழி போக்குவரத் துக்கு பெரிதும் உதவும். நீண்டதூர கடல் பயணம் செய்வோர், மலை ஏறுவோருக்கு மிகவும் பயனுள்ள தாக இருக்கும். வாகன கண் காணிப்பு, விமானப் போக்குவரத்து மேலாண்மை, பேரிடர் மேலாண்மை, செல்போன் சேவை ஒருங்கிணைப்பு, வரைபடம் மற்றும் புவிஅமைப்பு தகவல் பெறுதல் ஆகியவற்றுக்கும் உதவும். மீனவர்கள் மற்றும் கடல்வழி பயணம் செய்பவர்களுக்கு காட்சி மற்றும் குரல்வழி சேவை வழங்கு வதற்கும் இந்த செயற்கைக் கோள் பெரிதும் உதவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x