Last Updated : 25 Nov, 2021 08:14 PM

1  

Published : 25 Nov 2021 08:14 PM
Last Updated : 25 Nov 2021 08:14 PM

அன்னா ஹசாரே மருத்துவமனையில் அனுமதி: நெஞ்சுவலி குறைந்து சீராக உள்ளதாக தகவல்

அன்னா ஹசாரே | படம்: ஏஎன்ஐ

மும்பை

சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே புனே மருத்துவமனை ஒன்றில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது நெஞ்சுவலி குறைந்து சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

2011 ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முகமாக இருந்தவர் அன்னா ஹசாரே. 2013ல் லோக்பால் ஊழல் தடுப்பு சட்டம் இயற்றுவதற்கான காரணகர்த்தாக இருந்தவர். புனேவில் இருந்து 87 கிமீ தொலைவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகான் சித்தி கிராமத்தில் தற்போது வசித்துவருகிறார்.

சமூகப் பிரச்சினைகளுக்காக அவ்வப்போது உண்ணாவிரதப் போராட்டங்களைத் தொடங்கும் ஹசாரே, ஊழல் எதிர்ப்பு கண்காணிப்பாளர்களை நியமிக்கக் கோரி ஏழு நாள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு 2019 இல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, ​​மூளைக்கு ரத்தம் சப்ளை இல்லாததால், அவர் பலவீனமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஏஎன்ஐ வெளியிட்டுள்ள ட்வீட்

இந்த ஆண்டு தொடக்கத்திலும் உண்ணாவிரதத்தை ஹசாரே அறிவித்தார். சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக உண்ணாவிரதத்தைத் தொடங்குவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார், அதில் ''ஜனவரி இறுதிக்குள் தனது வாழ்க்கையின் கடைசி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவேன்'' என்று கூறினார். இருப்பினும், பின்னர், அவர் பின்வாங்கி, பாஜக மூத்த தலைவர் ஃபட்னாவிஸ் முன்னிலையில் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றார்.

அப்போது அவர் எழுப்பிய 15 கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதுவே தனது வாபஸ் முடிவுக்கு காரணம் என்று அவர் கூறியிருந்தார். ''விவசாயிகளின் பிரச்சினையை நான் மூன்று ஆண்டுகளாக எழுப்பி வருகிறேன். விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை 50 சதவீதம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக எனக்கு கடிதம் கிடைத்துள்ளது" என்றும் அவர் கூறினார்.

விவசாயிகளின் கடுமையான ஓராண்டு போராட்டத்திற்கு பிறகு தற்போது,மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்ய ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹசாரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து, சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே புனேவில் ரூபி ஹால் கிளினிக் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹசாரேவின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அவ்துத் போதம்வாட் கூறியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x