Published : 25 Nov 2021 11:03 AM
Last Updated : 25 Nov 2021 11:03 AM
குறைவான கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக 13 மாநிலங்களுக்கு மத்திய அர்சு கடிதம் எழுதியுள்ளது.
நாகலாந்து, சிக்கிம், மகாராஷ்டிரா, கேரளா, கோவா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், மேற்குவங்கம், லடாக் யூனியன் பிரதேசம் ஆகிய பகுதிகள் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை போதிய அளவில் இல்லை என மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை ராஜேஷ் பூஷன், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையைக் குறைத்தால், உண்மையான தொற்று நிலவரத்தை கணிக்க முடியாது.
குளிர் காலம் தொடங்கியுள்ளது, அதேபோல் ஒரு சில மாநிலங்களில் காற்று மாசுபாடும் அதிகமாக இருக்கிறது. இதனால், இயல்பாகவே மக்கள் சுவாசப்பாதை தொற்றால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் கரோனா பரிசோதனைகளை மாநிலங்கள் சிரத்தையுடன் மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு செய்வதால் தான் நோய்த் தொற்றின் போக்கை, அது எந்த பகுதியில் தாக்கம் செலுத்துகிறது போன்றவற்றை சரியாக கணிக்க முடியும். ஆரம்பநிலை ஹாட்ஸ்பாட் கண்டறிதல் தான் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான சிறந்த உத்தி. ஆகையால் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் யூனியன் பிரதேசங்கள் எவ்வித சுணக்கமும் இல்லாமல் கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "வளர்ந்த மேலை நாடுகள் சிலவற்றில் கரோனா 4வது, 5வது அலை ஏற்பட்டுள்ளது. இதனால், தொடர்ச்சியான பரிசோதனைகளை இங்கு நாம் மேற்கொண்டால் தான் தொற்றின் வீரியத்தின் போக்கை அறிய முடியும்" என்று ராஜேஷ் பூஷன் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,119 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 396 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,45,44,822. இதுவரை கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர்: 3,39,67,962 என்றளவில் உள்ளது.
இதுவரை, 119.38 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. விரைவில் 12 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment