Published : 24 Nov 2021 08:06 PM
Last Updated : 24 Nov 2021 08:06 PM

பாஜகவில் இணைந்தார் அதிருப்தி எம்எல்ஏ: உ.பியில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரஸுக்கு பின்னடைவா? 

இன்று (புதன்கிழமை) பாஜகவில் இணைந்த அதிதி சிங் எம்எல்ஏ

லக்னோ

உ.பி.சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளநிலையில் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏ அதிதி சிங் பாஜகவில் இணைந்துள்ளது காங்கிரஸுக்கு பின்னடைவை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

34 வயதான அதிதி சிங், சில சர்ச்சை நடவடிக்கைகளுக்காக, கடந்த ஆண்டு மே மாதம் கட்சியின் மகளிர் பிரிவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சில தினங்களுக்கு முன்பாகவும் பிரியங்காவை இவர் கடுமையாக விமர்சனம் செய்தார். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தபோது அதனை பிரியங்கா விமர்சித்ததற்கு அதிதி சிங் கடுமையாக சாடியிருந்தார்.

"பிரியங்கா காந்திக்கு மசோதாக்கள் கொண்டு வரப்பட்டபோது ஒரு பிரச்சனை. சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதில் அவருக்கு ஒரு பிரச்சனை. அவருக்கு என்ன வேண்டும்? அதை அவர் தெளிவாகச் சொல்ல வேண்டும். அவர் விவசாயிகள் பிரச்சினையை அரசியலாக்கவே பார்க்கிறார். இத்தகைய மக்கள் பிரச்சனைகளைப் பொறுத்தவரை, பிரியங்கா காந்தி எப்போதும் அதை அரசியலாக்கி வருகிறார். லக்கிம்பூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. உச்ச நீதிமன்றமும் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது . பிரியங்கா இத்தகைய அரசு அமைப்புகளை நம்பவில்லை என்றால், அவர் யாரைத்தான் நம்புகிறார் என்று புரியவில்லை'' என்று அதிதி சிங் கூறினார்.

இந்நிலையில்தான் அதிருப்தி எம்எல்ஏவாக கட்டம்கட்டப்பட்ட அதிதி சிங் இன்று லக்னோவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாஜகவில் இணைந்துள்ளார். பாஜக எதிர்க்கட்சி எம்எல்ஏக்களையும் முக்கிய தலைவர்களையும் தொடர்ந்து தன்பக்கம் இழுப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டிவருகிறது.

பாஜகவைப் பொறுத்தவரை தேர்தல் காலங்களில் பல்வேறு வகையான காய்நகர்த்தலில் ஈடுபட்டு வெற்றிக்கனியை பறிப்பதில் சுறுசுறுப்பாக செயல்பட்டுவரும் ஒரு கட்சியாக இயங்கிவருகிறது.

தற்போது, விவசாயச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் மிகப்பெரிய எதிர்ப்புகளையும், எரிபொருள் மற்றும் காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டங்களையும் எதிர்கொண்டு பாஜக மீண்டும் தேர்தலுக்கு தயாராகிவருகிறது என்பது கண்கூடு.

காங்கிரஸ் கோட்டையான ரேபரேலி சரியுமா?

ரேபரேலியிலும் இந்த காய்நகர்த்தலை மிக எளிதாக செய்துமுடித்துள்ளது பாஜக.

உ.பியின் முக்கியமான தொகுதியாக விளங்கிவரும் ரேபரேலி சட்டப்பேரவை தொகுதி தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரை ஒரேவிதமாகவே நகர்ந்துவந்துள்ளது, கடந்த ஆறு தேர்தல்களில் காங்கிரஸ் நான்கு முறை வெற்றிபெற்றுள்ளது. 2007 மற்றும் 2012ல் அது தோல்வியடைந்த இரண்டு முறை, அப்போது வெளியேற்றப்பட்ட காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் குமார் சிங் நான்காவது மற்றும் ஐந்தாவது தேர்தல்களில் வெற்றி பெற்றார்.

ரேபரேலி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கோட்டையாகும். 1980 முதல் ஒவ்வொரு மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கே (விதிவிலக்குகள் 1996 மற்றும் 1998 இல், பிஜேபியின் அசோக் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டபோது தவிர) மக்கள் வாக்களித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தான் அகிலேஷ் குமார் சிங்கின் மகள் அதிதி சிங். அவர் 2017 இல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார், பிஎஸ்பியின் ஷாபாஸ் கானை கிட்டத்தட்ட 90,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பாஜக வேட்பாளர் அனிதா ஸ்ரீவஸ்தவா மூன்றாவதாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பின்தங்கி இருந்தார்.

அதிதி சிங்கை பாஜகவில் இணைத்துக்கொள்வதன்மூலம் காங்கிரஸ் கோட்டையை புரட்ட உதவும் என்று ஆளும் கட்சி நம்புகிறது, ஒருவேளை அது நடந்தால் அது மிக முக்கியமான முடிவாக இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x