Published : 09 Mar 2016 07:30 AM
Last Updated : 09 Mar 2016 07:30 AM
விவசாய நிலத்தில் எரிவாயு குழாய்களை பதிக்கும் ‘கெயில்’ நிறுவனத்தின் திட்டத்தை எதிர்த்து தமிழக அரசு மற்றும் தேமுதிக சார்பில் தொடரப்பட்ட சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து பெங்களூருவுக்கு 871 கி.மீ. தொலைவுக்கு குழாய் மூலம் எரிவாயு எடுத்துச் செல்லும் திட்டத்தை இந்திய எரிவாயு ஆணையம் (கெயில்) அமைப்பு செயல்படுத்தி வருகிறது. கேரளா, தமிழகம், கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்கள் வழியாக குழாய் பதிக்கப்படுகிறது.
ரூ.3,000 கோடி செலவில் செயல் படுத்தப்படும் இத்திட்டத்தின்படி, தமிழகத்தில் 504 கி.மீ. தொலை வுக்கு குழாய் பதிக்கப்படுகிறது. இத்திட்டத்தால் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 7 மாவட்டங்களில் 134 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக எதிர்ப்பு குரல் கிளம்பியது.
இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. கேரளா வில் நெடுஞ்சாலைகளை ஒட்டியே எரிவாயு குழாய் அமைக்கப் பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் விளைநிலங்களில் எரிவாயு குழாய்களை அமைப்பதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
விவசாயிகள் ஏகமனதாக தெரிவித்த எதிர்ப்பை தொடர்ந்து, இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தடை விதித்தது. தமிழக அரசின் அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
ரூ.600 கோடி செலவு
ஆனால், இத்திட்டத்துக்காக ஏற்கெனவே ரூ.600 கோடி செலவழித்துவிட்டதாக ‘கெயில்’ அமைப்பு சார்பில் தெரிவிக்கப் பட்டதால், இத்திட்டத்துக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பிலும் விவசாய சங்கங்கள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மத்திய அரசுக்கும், ‘கெயில்’ அமைப்புக்கும் இடையிலான ஒரு திட்டத்தில் தலையிட மாநில அரசுக்கு உரிமையில்லை என்று கூறி, மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து கடந்த மாதம் 2-ம் தேதி உத்தரவிட்டது.
எரிவாயு குழாய் திட்டத் துக்கு மீண்டும் அனுமதி அளிக் கப்பட்டதால், விவசாயிகள் போராட் டத்தை தொடங்கினர். விவசாய நிலத்தில் பாதை அமைப்பதை மாற்றி, நெடுஞ்சாலைகள் வழியாக குழாயை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்து, எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி தமிழக அரசு சார்பிலும் தேமுதிக சார்பிலும் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உச்ச நீதிமன்ற உத்தரவால் 5,500 சிறு விவசாயிகள் நேரடியாக பாதிக்கப்படுவதாக மனுவில் முறையிடப்பட்டிருந்தது.
இம்மனுக்கள் உச்ச நீதி மன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. சீராய்வு மனுவை ஏற்பதற்கான முகாந்திரம் இல்லை என்று கூறி மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT