Published : 24 Nov 2021 11:48 AM
Last Updated : 24 Nov 2021 11:48 AM
உத்தரப்பிரதேச மாநிலம் கௌதம் புத்தா நகரில் உள்ள ஜேவாரில் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு நாளை பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
இதன் மூலம் இந்தியாவில் ஐந்து சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட ஒரே மாநிலமாக உத்தரப்பிரதேசம் மாறவிருக்கிறது.
அண்மையில் தொடங்கப்பட்ட குஷிநகர் விமான நிலையம், அயோத்தியாவில் கட்டப்பட்டு வரும் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட புதிய சர்வதேச விமானநிலையங்கள், உத்தரப்பிரதேச மாநிலத்தின் பன்முக வளர்ச்சிக்கு சான்றாக இருக்கிறது.
புதிதாக அமையவுள்ள நொய்டா விமான நிலையம் டெல்லி தலைநகர் பிராந்தியத்தின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக இருக்கும். இது இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் நெருக்கடி குறைவதற்கு உதவும். இதன் அமைவிடம் காரணமாக டெல்லி, நொய்டா, காசியாபாத், அலிகார், ஆக்ரா, ஃபாரிதாபாத் மற்றும் அருகில் உள்ள பகுதிகள் உள்ளிட்ட நகரங்களின் மக்களுக்கு சேவை புரியும்.
இந்த விமான நிலையத்தின் முதற்கட்டப்பணி ரூ.10,050 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். 1300-க்கும் அதிகமான ஹெக்டேர் நிலப்பரப்பில் முடிக்கப்பட உள்ள முதலாவது கட்ட விமான நிலையம் ஆண்டுக்கு சுமார் 1.2 கோடி பயனாளிகளுக்கு சேவை செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இது 2024 வாக்கில் நிறைவடையும். இதனை சர்வதேச ஒப்பந்ததாரரான சூரிச் சர்வதேச விமான நிலைய நிறுவனம் செயல்படுத்தும். முதல் கட்டத்திற்கான நில ஆர்ஜிதம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான மறுவாழ்வு ஆகியவற்றுக்கான பூர்வாங்க பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
வடக்கு இந்தியாவின் சரக்குப் போக்குவரத்து நுழைவாயிலாக இந்த விமான நிலையம் இருக்கும். அளவு மற்றும் திறன் காரணமாக உத்தரப்பிரதேசத்தில் மாற்றம் ஏற்படுத்துவதாக இந்த விமான நிலையம் இருக்கும் என விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்துவதாக இது இருப்பதோடு உலகளாவிய சரக்குப் போக்குவரத்து வரைபடத்தில் இந்த மாநிலம் இடம்பெறுவதற்கு உதவும். மொத்தச் செலவு, சரக்குப்போக்குவரத்திற்கான நேரம் ஆகியவற்றைக் குறைப்பதை நோக்கமாகக்கொண்டு இந்தியாவில் முதல் முறையாக ஒருங்கிணைந்த பலவகை சரக்கு போக்குவரத்து மையம் என்ற கோட்பாட்டைக் கொண்ட விமான நிலையமாக இது இருக்கும்.
இதில் உள்ள சரக்கு முனையம் 20 லட்சம் மெட்ரிக் டன் திறன் கொண்டதாக இருக்கும். பின்னர் இது 80 லட்சம் மெட்ரிக் டன்னாக விரிவுப்படுத்தப்படும். தொழிற்சாலைகளின் உற்பத்தி பொருட்களைத் தடையின்றி கொண்டுசெல்ல வசதிகளை உருவாக்குவதன் மூலம் இந்தப் பிராந்தியத்தில் அதிக அளவு முதலீடுகளை ஈர்த்தல், விரைவான தொழில்துறை வளர்ச்சியை ஊக்கப்படுத்துதல், உள்ளூர் உற்பத்திப் பொருட்களை தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளுக்குக் கொண்டு செல்லுதல் ஆகியவற்றிற்கு இந்த விமான நிலையம் முக்கியமான பங்களிப்பு செய்யும். இது ஏராளமான புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதோடு ஏராளமான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்.
தரைவழிப் போக்குவரத்து மையமாக இந்த விமான நிலையம் உருவாகும் என்பதால் மெட்ரோ ரயில் போக்குவரத்து, அதிவேக ரயில் நிலையங்கள், டாக்சி, பேருந்து சேவைகள், தனியார் வாகன நிறுத்தம் போன்ற பன்முக போக்குவரத்து மையமாகவும் இது இருக்கும். இதன் மூலம் சாலை, ரயில், மெட்ரோ மூலம் விமான நிலையத்திற்கு தடையில்லா போக்குவரத்து தொடர்பை ஏற்படுத்த இயலும். யமுனா விரைவுச்சாலை, மேற்கத்திய புறநகர் விரைவுச்சாலை, கிழக்கத்திய புறநகர் விரைவுச்சாலை, டெல்லி-மும்பை விரைவுச்சாலை போன்ற அருகில் உள்ள அனைத்து முக்கிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் விமான நிலையத்தோடு இணைக்கப்படும். டெல்லிக்கும், விமான நிலையத்திற்கும் இடையேயான பயண நேரத்தை 21 நிமிடங்கள் மட்டுமே என மாற்றும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள டெல்லி – வாரணாசி அதிவேக ரயில் போக்குவரத்து இந்த விமான நிலையத்தோடு இணைக்கப்படும்.
பராமரிப்பு, பழுதுபார்ப்பு, ஓவராலிங் சேவையில் நவீன முறையை இந்த விமான நிலையம் கொண்டிருக்கும். குறைந்த செலவில் இயக்கும் வகையிலும், பயணிகளுக்கு தடையில்லா விரைந்த போக்குவரத்து நடைமுறையோடும் இந்த விமான நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விமானத்தை மறுநிலைநிறுத்தல் இல்லாமலேயே ஒரே இடத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களை இயக்கும் வகையில் நெகிழ்வுத்தன்மை கொண்ட புதிய வடிவமைப்பு இந்த விமான நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது விரைவாகவும் பயனுள்ள முறையிலும் விமானத்தைத் திருப்புவதற்கும் எளிதாகவும், தடையின்றியும் பயணிகள் இடம் மாறுவதை உறுதி செய்வதாகவும் இருக்கும்.
கரியமில வாயுவை வெளியேற்றாத இந்தியாவின் முதலாவது விமான நிலையமாக இது இருக்கும். திட்டத்தை செயல்படுத்தும் இடத்தில் உள்ள மரங்களைப் பயன்படுத்தி வனப்பூங்கா இந்த நிலப்பரப்பில் உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு தாவரவகைகள் நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாக்கப்படும். இதன் மேம்பாடு முழுவதும் இயற்கை சார்ந்ததாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...