Published : 23 Nov 2021 04:41 PM
Last Updated : 23 Nov 2021 04:41 PM

ராமாயண எக்ஸ்பிரஸ் ஊழியர்களுக்கு காவி சீருடை: சாதுக்கள் எதிர்ப்பால் மாற்ற உத்தரவு

காவி உடையிலிருந்து வேறு உடைக்கு மாறிய ரெயில்வே கேட்டரிங் ஊழியர்கள் | படம்: ட்விட்டர்.

உஜ்ஜயினி (மத்தியப் பிரதேசம்)

ராமாயண எக்ஸ்பிரஸ் கேட்டரிங் ஊழியர்களுக்கு காவி சீருடை அணிந்து வர அளிக்கப்பட்ட உத்தரவு சாதுக்கள் ஆட்சேபணைக்குப் பிறகு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம் உஜ்ஜயினி நகரில் அமைந்துள்ள சிவபெருமானின் புகழ்பெற்ற ஸ்ரீ மஹாகாளேஷ்வர் கோயில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிம்ஹஸ்த கும்பமேளாவை விமரிசையாக நடத்துகிறது. கும்பமேளாவை முன்னிட்டு நாட்டின் முதல் ராமாயண சர்க்யூட் ரயில் கடந்த நவம்பர் 7 அன்று டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து 17 நாள் பயணமாகப் புறப்பட்டது.

ராமரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய 15 இடங்களுக்கு இந்த ரயில் செல்கிறது. 7,500 கி.மீ.க்கும் அதிகமான தூரத்தை கடக்கும் இந்த ரயில், அயோத்தி, பிரயாக்ராஜ், நந்திகிராம், ஜனக்பூர், சித்ரகூட், சீதாமர்ஹி, நாசிக், ஹம்பி மற்றும் ராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு யாத்ரீகர்களை அழைத்துச் செல்லும்.

இந்த ரயிலில் உணவு பரிமாறும் கேட்டரிங் ஊழியர்களுக்கு ஐஆர்சிடிசி சமீபத்தில் ஆடைக் கட்டுப்பாட்டை விதித்து ட்வீட்டரில் உத்தரவை வெளியிட்டது. அதன்படி ராமாயண எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் காவி உடை அணிந்து பணியாற்றினர். இதற்கு கடும் ஆட்சேபனை எழுந்துள்ளது.

கடும் எதிர்ப்பு

ரயில்வே துறையின் இந்த நடவடிக்கைக்கு திங்கள் கிழமை காலையிலிருந்தே உஜ்ஜயினியில் உள்ள இந்து சாதுக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பணியாளர்கள் காவி உடை அணிந்து பணியாற்றக் கூடாது என்று ஆட்சேபனை தெரிவித்ததுடன், ''இது இந்து மதத்தை அவமதிக்கும் செயல்'' என்றும் கூறியுள்ளனர். ஆடைக் கட்டுப்பாட்டை திரும்பப் பெறாவிட்டால் டிசம்பர் 12-ம் தேதி டெல்லியில் ரயிலை நிறுத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்தனர்.

ரயில்வே அமைச்சருக்குக் கடிதம்

இதுகுறித்து உஜ்ஜைன் அகடா பரிஷத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் அவதேஷ்புரி ஒரு செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ''ராமாயண விரைவு வண்டியில் காவி ஆடை அணிந்து சிற்றுண்டி மற்றும் உணவு பரிமாறும் பணியாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய ரயில்வே அமைச்சருக்கு இரண்டு நாட்களுக்கு முன் கடிதம் எழுதியுள்ளோம்.

சாது போன்ற தலைக்கவசத்துடன் காவி உடையை அணிவதும், 'ருத்ராட்ச' (புனித விதைகள்) 'மாலா' (மாலைகள்) அணிவதும் இந்து மதத்தையும் அதன் துறவிகளையும் அவமதிக்கும் செயலாகும். காவி ஆடைக் குறியீட்டை மாற்றாவிட்டால், டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் சாதுக்கள் ரயிலை நிறுத்துவார்கள். இந்து மதத்தைப் பாதுகாக்க இது அவசியம்'' என்றும் அவர் கூறினார்.

ஆடைக்கட்டுப்பாடு வாபஸ்

இந்நிலையில் செய்தி நிறுவன தகவல் ஊடகத்தில் வெளியானதை அடுத்து ஐஆர்சிடிசி ஒரு ட்வீட்டை வெளியிட்டது. அதில் ''ரயில் கேட்டரிங்கில் உணவு பரிமாறும் ஊழியர்களுக்கான காவி ஆடைக்கான ஆடைக்கட்டுப்பாட்டை ஐஆர்சிடிசி வாபஸ் பெறுகிறது. சேவை ஊழியர்களின் தொழில்முறை ஆடைகளின் தோற்றத்தில் சேவை ஊழியர்களின் ஆடை முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது, இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம்'' என்றும் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x