Published : 22 Nov 2021 04:00 PM
Last Updated : 22 Nov 2021 04:00 PM
கரோனா தொற்று காரணமாக நீண்டகாலமாகப் பள்ளிகளை மூடி வைத்ததால், மாணவர்களின் கற்கும் திறன் மட்டும் பாதிக்கப்படாமல், ஆண்-பெண் பாலினச் சமத்துவமும் பாதிக்கப்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது என்று யுனிசெஃப் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கரோனாவில் பள்ளிகள் மூடப்படும்போது ஏற்படும் பாலின பாதிப்புகள்” எனும் தலைப்பில் உலகளாவிய ஆய்வு யுனிசெஃப் சார்பில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் சிறுவர், சிறுமியர், ஆண், பெண் எனப் பலரும் பள்ளிகள் நீண்டகாலம் மூடுவதால் பாதிக்கப்பட்டனர்.
யுனெஸ்கோவின் கல்விக்கான துணை இயக்குநர் ஸ்டெஃபானியா ஜியானி கூறுகையில், “கரோனா பெருந்தொற்றால் நீண்டகாலம் பள்ளிகளை மூடி வைத்ததால், 190 நாடுகளில் 160 கோடி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டது. கல்வியைப் பெறும் வாய்ப்பை மட்டும் இழக்காமல், பள்ளிக்குச் செல்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகளையும் இழந்துவிட்டார்கள்.
கல்வியில் ஏற்பட்ட இந்த இடையூறால், மாணவர்கள் கற்பதில் பாதிப்பை ஏற்படுத்தி, இடைநிற்றலை அதிகப்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கல்வி கற்றலில் இருந்த பாலினச் சமத்துவத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக உடல்நலன், பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவற்றிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
ஏறக்குறைய 90 நாடுகளில் இருந்து புள்ளிவிவரங்களைச் சேகரித்து அறிக்கையை யுனிசெஃப் தயாரித்துள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“ஏழ்மையான சூழலில் எடுத்துக்கொண்டால், பெண் குழந்தைகள் கல்வி கற்கும் நேரம் வீட்டு வேலைகள் செய்வதால் குறைந்துள்ளது.
ஆண் குழந்தைகள் கல்வி கற்கும் நேரம் என்பது குடும்பத்துக்கு வருமானம் ஈட்டும் வேலையில் ஈடுபடுவதால் குறைந்துள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிந்திராமல் இருத்தல், இன்டர்நெட் இணைப்பு இல்லாமை, கலாச்சாரக் கட்டுப்பாடுகள் போன்றவற்றால், பெண் குழந்தைகள் ஆன்லைன் கல்வி கற்றலில் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.
கரோனா பரவல் காரணமாக டிஜிட்டல் முறையில் கற்றலில் பாலினப் பாகுபாடு அதிகரித்துள்ளது என்பது தெரிகிறது. வங்கதேசம், பாகிஸ்தானில் நடந்த ஆய்வுகளைப் பார்த்தால், பள்ளிகள் மூடப்பட்டதால், பாலினச் சமத்துவம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் நடந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 44 சதவீதப் பெண் குழந்தைகளும், சிறுவர்களில் 93 சதவீதம் பேரும் தங்களின் சொந்தப் பயன்பாட்டுக்கு மொபைல் போன் வைத்துள்ளனர். இதில் பெண் குழந்தைகள் பெரும்பாலானோருக்கு சொந்தமாக மொபைல் போன் இல்லை. அவர்கள் உறவினர்களைச் சார்ந்துதான் இருக்கிறார்கள். குறிப்பாக தந்தையின் மொபைல் போனைச் சார்ந்துதான் படிக்கிறார்கள்.
பல பெண் குழந்தைகள் உறவினர்கள் செல்போனைப் பயன்படுத்தினாலும் பல நேரங்களில் அது கல்வி கற்பதற்கான சூழலை உருவாக்கவில்லை. மேலும், வயதுவந்த பெண் குழந்தைகள் தவறான வழிக்குச் சென்றுவிடும் என்ற அச்சத்தால் அவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கவும் பெற்றோர்கள் தடை விதிக்கிறார்கள். நீண்டகாலம் பள்ளிகளுக்கு பெண் குழந்தைகள் செல்லாமல் இருப்பதால், கற்றதை மறந்துவிடும் ஆபத்து இருக்கிறது.
பள்ளிகள் கற்றலுக்கான தளங்கள் மட்டுமல்ல, பெண் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உயிர்நாடிகள். உடல் ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்கான ஒரு இன்றியமையாத இடம் என்பதை கரோனா தொற்று சரியான நேரத்தில் நினைவூட்டுகிறது. தொலைவில் இருந்து கற்றலில் தடைகள், பாலின அடிப்படையிலான சவால்களை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன''.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT