Published : 21 Nov 2021 03:06 AM
Last Updated : 21 Nov 2021 03:06 AM
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதால் 5 மாநில தேர்தலில் பாஜகவிற்கு பலன் கிடைக்கும் எனத் தெரிகிறது.
இந்த சட்டங்கள் வாபஸின் பின்னணியில் பாஜக ஆளும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல் முக்கிய இடம் வகிக்கிறது. இம்மாநிலத்தின் 403 சட்டப்பேரவை தொகுதிகளில் 2017-ம் ஆண்டு தேர்தலில் பாஜகவிற்கு 312 இடங்கள் கிடைத்தன. இவற்றில் மேற்குப்பகுதியில் கணிசமான தொகுதிகள் அமைந்துள்ளன. ஜாட் சமுதாய விவசாயிகள் அதிகம் வசிக்கும் இங்கு வேளாண் சட்டங் களுக்கு எதிரானப் போராட்டத்தின் தாக்கம் இருந்தது.
இது உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் அக்டோபர் 2-ல் நடந்த கலவரத்தால் 5 உயிர்கள் பலியாகி, கிழக்குப் பகுதிக்கும் பரவியது. இதன் பிறகும் உத்தர பிரதேசத்தின் தேர்தல் கணிப்புகள் பாஜகவிற்கு சாதகமாகவே வெளி யாகி வருகின்றன. எனினும், பாஜக எதிர்கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் அளிக்க விரும்பாமல் வேளாண் சட்டங்கள் வாபஸ் நடவடிக்கையை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு உ.பி.யின் கிழக்குப்பகுதியிலும் விவசாயிகள் கணிசமாக இருப்பது காரணமாகி விட்டது.
பஞ்சாப் தேர்தல்
இதேபோல், பஞ்சாபிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதன் 117 சட்டப்பேரவை தொகுதிகளில் 2017ம் ஆண்டு தேர்தலில் வென்ற காங்கிரஸ் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி செய்து வருகிறது. அப்போது முதல்வரான கேப்டன்.அம்ரீந்தர் சிங் காங்கிரஸிலிருந்து விலகி புதிய கட்சி துவக்கி உள்ளார். இதனால், காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கேள்விக்குறியாகி விட்டது.
சுமார் முக்கால்வாசி அளவில் விவசாய நிலப்பரப்பு கொண்ட பஞ்சாபின் சுமார் 77 தொகுதிகளில் விவசாய வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். அங்கு போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை விவசாயிகளே நிர்ணயிக்கின்றனர். இச்சுழலில் பிரதமர் மோடியின் வேளாண் சட்டங்கள் வாபஸ் முடிவு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாபில் சிரோமணி அகாலி தளம் கட்சியுடன் நிலவிய பாஜக கூட்டணி, வேளாண் சட்டம் காரணமாக முறிந்திருந்தது. தற்போது, சட்டங்கள் திரும்பப் பெறும் நிலையால், இக்கூட்டணி மீண்டும் அமைய வாய்ப்புள்ளது.
வாக்குகள் பிரியும்
இவ்வாறு சேர்ந்தால் அங்கு எதிர்க்கட்சியாக வளர்ந்து விட்ட ஆம் ஆத்மியும் இணைந்து மும்முனைப் போட்டி ஏற்படும். இதில், ஆம் ஆத்மி மற்றும் காங்கிர ஸின் வாக்குகள் பிரிவால் பாஜக கூட்டணி பலனடையும் வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. இதன் தாக்கமாக தொங்கு சபை வரவும் வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது. இந்த சூழலை மத்திய அரசுக்கு உணர்த்த பஞ்சாபின் முக்கிய விவசாயிகள் குழு டெல்லி வந்திருந்தது.
இவர்களை பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் சந்தித்திருந்தனர். இவர்கள், பாகிஸ்தானின் கர்தார்புர் செல்லும் பாதையை இந்த வருடம் குருநானக் ஜெயந்திக்கு திறந்து விட்ட பலனும் மத்திய அரசிற்கு கிடைக்கும் என எடுத்துக் கூறியதாக தெரிகிறது.
இந்நிலையில், பாஜக ஆளும் உத்தராகண்டின் சட்டப்பேரவை தேர்தலிலும் பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு உத்தர பிரதேசத்தின் எல்லைகளில் அமைந்த தொகுதிகளில் விவசாயி கள் வாக்குகள் அதிகம் இருப்பது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT