Last Updated : 29 Mar, 2016 08:35 AM

 

Published : 29 Mar 2016 08:35 AM
Last Updated : 29 Mar 2016 08:35 AM

மேற்குவங்க தேர்தல்: இடதுசாரிகளை கைவிட்டு போன பாராநகர் தொகுதி

14 முறை வென்ற இடத்தை மீண்டும் கைப்பற்ற முயற்சி



கடந்த 1951-ம் ஆண்டு முதல் 14 முறை தொடர்ந்து இடதுசாரிகள் வெற்றி பெற்ற தொகுதி, வடக்கு 24 பாரக்னாஸ் மாவட்டத்தில் உள்ள பாராநகர் தொகுதி. ஏழு முறை கம்யூனிஸ்ட் கட்சியும், ஏழு முறை புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியும் (ஆர்எஸ்பி) தொடர்ந்து வெற்றிபெற்ற இந்த தொகுதி, கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு வசமானது.

கடந்த 51-ம் ஆண்டு முதல் 71-ம் ஆண்டு வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஜோதிபாசு இந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதி கையை விட்டுப் போனதை இடதுசாரிகள் கவுரவ குறைச்சலாகக் கருதுகின்றனர். எனவே, இந்த முறை எப்படியாவது பாராநகர் தொகுதியை கைப்பற்றியே ஆக வேண்டும் என்று இடதுசாரிகள் களமிறங் குகின்றன. இத்தொகுதியில் ஆர்எஸ்பி சார்பில் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர தொண்டரும் மூத்த தலைவருமான சுகுமார் கோஷ் போட்டியிடுகிறார். ‘தி இந்து’வுக்காக அவரிடம் பேட்டி கண்டபோது அவர் கூறியதாவது:

உங்கள் கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் இன்னும் பிரச்சினை உள்ளதே?

வரலாற்றிலேயே முதன்முறையாக இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறது. எங்கள் கூட்டணியில் 22 இடங்களில் மட்டுமே பிரச்சினை உள்ளது. அதில் 9 இடங்களில் மட்டுமே ஆர்எஸ்பி கட்சியுடன் பிரச்சினை உள்ளது. இதில் 5 தொகுதிகள் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ளன. இப்பிரச்சினைகளை நாங்கள் இன்னும் ஒருவாரத்தில் தீர்த்துக் கொள்வோம்.

இடதுசாரி காங்கிரஸ் இடையிலான கூட்டணி பற்றி நாடு முழுவதும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்தக் கூட்டணியை எப்படி அமைத்தீர்கள்?

மேற்குவங்கத்தில் திரிணமூல் ஆட்சிக்கு வந்தபின், மாநிலத்தின் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் துறையினர் வேறு மாநிலங்களுக்கு சென்று விட்டனர். மம்தா கட்சி தலைவர்கள் பகிரங்கமாக லஞ்சம் வாங்குகின்றனர். கடந்த முறை தேர்தலில் போட்டியிட்ட அவர்களது கட்சி வேட்பாளர்களுக்கு தொகுதிக்கு ரூ.15 லட்சம் கொடுத்தனர். இந்தப் பணம் எங்கிருந்து வந்தது? இதை நன்கொடை என்பதை எப்படி ஏற்க முடியும்? மாணவர்களுக்கு 40 லட்சம் சைக்கிள் கொடுத்ததாக சொல்கிறார். ரூ.3,000-க்கு சைக்கிள் வாங்கப்பட்டதாகக் கூறுகின் றனர். டெண்டர் இல்லாமல் ரூ.1,700-க்கு சைக்கிள் வாங்கியதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. மீதி பணம் யாருக்கு போனது? கூட்டணிக் கட்சியி னரை மதிக்காததால், காங்கிரஸ் கட்சி எங்களுடன் வந்துவிட்டது. மற்ற கட்சிகள் எல்லாம் விலகிவிட்டனர். மம்தாவை தோற்கடிப்பதே எங்களது நோக்கம்.

மம்தா எளிமையானவர், நேர்மையானவர் என்ற எண்ணம் நாட்டு மக்கள் மத்தியில் உள்ளதே?

அதில் உண்மை இல்லை. திருமணமாகாதவர், சாதாரண ரப்பர் செருப்பு அணிந்து எளிமையாக இருக்கிறார் என்பது வெளித்தோற்றம். ஆனால், அவரது கட்சியினர் லஞ்சம் வாங்குகின்றனர். அவை மம்தாவுக்கு போய்ச் சேருகிறது. இல்லாவிட்டால், அவர்களை காப்பாற்ற மாட்டார்.

இடதுசாரி காங்கிரஸ் கூட்டணி நேர்மையற்ற கூட்டணி என்ற குற்றச்சாட்டு குறித்து?

காங்கிரஸ் கட்சியுடனும், பாஜகவுட னும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஏற்கெ னவே கூட்டணி அமைத்து போட்டியிட் டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைத்தால் மட்டும் எப்படி நேர்மையற்றதாகி விடும்.

கேரளாவில் பகை, மேற்குவங்கத்தில் நட்பு என்று பிரதமர் நரேந்திர மோடிகூட உங்கள் கூட்டணியை விமர்சித்துள்ளாரே?

ஒவ்வொரு மாநிலத்தின் நிலைமைக்கு ஏற்ப நாங்கள் கூட்டணி வைக்கிறோம். திரிணமூல் கட்சியின் செல்வாக்கு சரிந்துவிட்டது. காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினரின் உதவியுடன் பாராநகர் தொகுதியை இந்த முறை கைப்பற்றியே தீருவோம்.

பிரதமர் மோடியின் பிரச்சாரம் குறித்து?

பிரதமர் நரேந்திர மோடி எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் லட்சக்கணக்கில் செலவு செய்து கூட்டம் சேர்க்கின்றனர். பிஹார், உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஆட்களை அழைத்து வந்து கூட்டம் காட்டியுள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.200 மற்றும் உணவு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு ஒருநாள் வருமானம் கிடைக்கிறது என்பதால் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். என்னிடம் பணம் இருந்தால், நான் கூட இதுபோல் கூட்டம் காட்ட முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வாக்குக்கு பணம்

தமிழகத்தில் வாக்குக்கு பணம் வழங்கப்படுகிறது. அத்தகைய புகார் எதுவும் இங்கு உள்ளதா? என்ற கேள்விக்கு, “மேற்குவங்கமும் விதிவிலக்கல்ல. நேற்று இரவு கூட பாராநகர் மற்றும் காமர்ஹட்டி தொகுதிகளில் திரிணமூல் கட்சியைச் சேர்ந்த ஒருவர் ரூ.500 நோட்டுகளை கட்டுக்கட்டாக வைத்துக் கொண்டு இரவு நேரத்தில் பொதுமக்களுக்கு விநியோகித்துள்ளார்.

படம்: ஆர்எஸ்பி-யின் பாராநகர் தொகுதி வேட்பாளர் சுகுமார் கோஷ்.

கூட்டத்தில் கலந்து கொண்டால் பணம் தருகின்றனர். சாப்பாடு போடுகின்றனர். அழைத்து வந்து, மீண்டும் அழைத்துச் செல்கின்றனர். இந்த நடவடிக்கை எல்லா மாநிலங்களிலும் இருக்கிறது” என்றார்.

5 ரூபாய்க்கு படகு பயணம்

கொல்கத்தாவில் கை ரிக் ஷா, சைக்கிள் ரிக் ஷா, ஆட்டோ, டாக்சி, சிட்டி பஸ், ஏசி பஸ், டிராம், மின்சார ரயில், மெட்ரோ ரயில், படகு பயணம் என அனைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ளன. சென்னை நகரைப் போல பஸ், ரயில்களில் பிதுங்கிக் கொண்டு செல்லாமல் வசதியாக பயணம் செய்யும் நிலை உள்ளது. சென்னையைப் போல இல்லாமல், மெட்ரோ ரயில் கட்டணம் 5, 10 மற்றும் 15 ரூபாய்தான்.

இவற்றுக்கு மகுடம் வைப்பது போல் அமைந்திருப்பது ஹூக்ளி நதியில் உள்ள படகு பயணம். ரூ.5 கட்டணத்தில் ஹூக்ளி நதியில் படகில் பயணம் செய்ய முடிகிறது. ஹவுரா, தாய்காட், பாபுகாட், ஷிப்பூர், டெல்கால்காட் இடையே 5 நிமிடங்களுக்கு ஒரு படகு வந்து பயணிகளை ஏற்றிச் சென்ற வண்ணம் உள்ளது. ஹூக்ளி நதியின் இரு கரைகளிலும் உள்ள மக்களுக்கு இந்த படகு வசதி மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. நாட்டில் உள்ள மெட்ரோ நகரங்களில் அனைத்து போக்குவரத்து வசதிகளும் ஒருங்கே அமைந்துள்ள நகராக கொல்கத்தா திகழ்வது பெருமைக்குரியதாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x