Published : 20 Nov 2021 03:06 AM
Last Updated : 20 Nov 2021 03:06 AM
வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை சென்னை அருகே கரையை கடந்தது. இது ஆந்திராவில் நிலை கொண்ட தால், சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பல ஏரிகள் உடைந்து பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. சித்தூர் மாவட்டத்தில் நீவா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சித்தூரில் ஏராளமான கால்நடைகள் மக்களின் கண் முன்பே நீரில் அடித்துச் செல்லப் பட்டன. இதைப் பார்த்த பலர் கண்ணீர் விட்டு அழுதனர்.
கல்யாணி அணை நிரம்பிய தால், 2 மதகுகள் திறக்கப்பட்டன. இதனால் சுவர்ணமுகி நதியில் திருப்பதியிலிருந்து நெல்லூர் மாவட்டம் தடா வரை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. கார்கள், பைக்குகள், கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டன. அனந்தபூர் மாவட்டத்தில் கார் வெள்ளத்தில் சிக்கியதால் அதில் தவித்த 4 பேரை காப்பாற்ற 6 பேர் சென்றனர். பிறகு அவர்களும் வெள்ளத்தில் சிக்கினர். பிறகு 10 பேரும் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
திருமலையில் எங்கு பார்த்தாலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை ஓயும் வரை தினமும் மாலை 6 மணிக்கு மலைப்பாதைகள் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
பலத்த மழைக்கு ஆந்திரா வில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். கடப்பா மாவட்டம், ராஜம்பேட்டையில், நேற்று சத்யவதி நதியின் அருகே நந்தலூரில் 3 அரசு பஸ்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டன. இதிலிருந்து 12 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். மற்றவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
திருப்பதி, நெல்லூரில் மேலும் 5 பேர் என மொத்தம் 17 பேர் வெள்ளத்தில் சிக்கியும் மின்சாரம் தாக்கியும் இறந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.
ரூ. 5 லட்சம் நிதியுதவி
வெள்ள பாதிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்றும் காணொலி மூலம் உரையாடினார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப் படுத்த முதல்வர் உத்தரவிட்டார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.
ஜெகனுடன் பிரதமர் பேச்சு
ஆந்திர முதல்வர் ஜெகனிடம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை தொலைபேசி மூலம் பேசினார். அப்போது ஆந்திராவில் மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் முதல்வர் ஜெகன் விளக்கினார். ஆந்திராவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் உறுதி அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT