Published : 19 Nov 2021 07:02 PM
Last Updated : 19 Nov 2021 07:02 PM
ராணுவ வாகனங்களை தாக்கக் கூடிய ஏவுகணைகளுக்குத் தேவையான உந்துவிசை அமைப்புகளை தயாரிப்பதற்காக ரூ 400 கோடி மதிப்பிலானத் திட்டத்திற்கு ஜான்சியில் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
உத்திரப்பிரதேசத்தின் ஜான்சியில் சுதந்திர இந்தியாவின் 75ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நவம்பர் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தேசிய பாதுகாப்பு அர்ப்பணிப்புத் திருவிழா நடைபெறுகிறது.
விழாவின் ஒருபகுதியாக பாதுகாப்புத் துறைக்கான பல்வேறு முன்னெடுப்புகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் செய்தார்.
உத்திரப்பிரதேச பாதுகாப்பு தொழில் வழித்தடத்தின் ஜான்சி முனையத்தில் ரூ. 400 கோடி மதிப்பிலானத் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். ராணுவ வாகனங்களை தாக்கக் கூடிய ஏவுகணைகளுக்குத் தேவையான உந்துவிசை அமைப்புகளை தயாரிப்பதற்காக ஒரு தொழிற்சாலை உருவாக்கப்படும். இந்தத் திட்டத்தை பாரத் டயனமிக்ஸ் லிமிடெட் செயல்படுத்துகிறது.
முன்னாள் என்சிசி மாணவர்கள் சங்கத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். முன்னாள் என்சிசி மாணவர்கள் என்சிசி-யோடு மீண்டும் தொடர்பு கொள்வதற்கு உதவியாக இருக்கும் வகையில் முறைப்படியான ஒரு இணையதளத்தை (பிளாட்ஃபார்ம்) உருவாக்கும் நோக்கத்தோடு இந்தச் சங்கமானது தொடங்கப்படுகிறது. முன்னாள் என்சிசி மாணவரான பிரதமர் இந்தச் சங்கத்தின் முதல் உறுப்பினராக தன்னைப் பதிவு செய்து கொண்டார்.
என்சிசி மாணவர்களுக்கான ஊக்குவிப்புப் பயிற்சி தேசிய செயல்திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த தேசியத் திட்டமானது என்சிசி-யின் 3 பிரிவினருக்கும் தேவையான ஊக்குவிப்புப் பயிற்சி வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்படுகிறது. என்சிசி-யின் ராணுவப் பிரிவினருக்கான துப்பாக்கிச் சுடுதல் கருவிகள் அமைத்தல், விமானப் பிரிவினருக்கான மைக்ரோலைட் ஃப்ளையிங் பாவிப்பு கருவிகள் அமைத்தல் மற்றும் கப்பற்படை பிரிவினருக்கான படகு வலித்தல் கருவிகள் அமைத்தல் ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன.
தேசிய போர் நினைவகத்தில் மேம்படுத்தப்பட்ட எதார்த்த உலகம் என்பதன் அடிப்படையில் இயக்கப்படும் மின்னணு கூடங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பாதுகாப்புத் துறையில் சுயசார்பு இந்தியா திட்டத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட போர்த்தளவாடங்களை ராணுவப் படை தளபதிகளிடம் முறைப்படி ஒப்படைத்தார்.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) வடிவமைத்து தயாரித்த இலகுரக போர் ஹெலிகாப்டரை (LCH) விமானப் படைத்தளபதியிடம் பிரதமர் ஒப்படைத்தார். இதே போன்று இந்திய ஸ்டார்ட்-அப்புகள் வடிவமைத்து உருவாக்கிய ட்ரோன்கள் / யுஏவி-க்களை ராணுவ படைத்தளபதியிடம் ஒப்படைத்தார். டிஆர்டிஓ வடிவமைத்து பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் தயாரித்துள்ள கப்பற்படையின் கப்பல்களுக்குத் தேவையான அதிநவீன மின்னணு போர்த்தொழில் தொகுப்பினை கப்பற்படை தளபதியிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார்.
இலகுரக போர் ஹெலிகாப்டரில் அதிநவீன தொழில் நுட்பங்களும் மிகத் திறமையுடன் மறைவாக போரில் ஈடுபடுவதற்கான சிறப்பம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவப் படைகள் இந்திய யுஏவி-க்களை பயன்படுத்துவது என்பது இந்திய ட்ரோன் தயாரிப்புத் தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பில் சிறப்புற்று வளர்கிறது என்பதற்கான சாட்சியமாக இருக்கிறது.
அதிநவீன மின்னணு போர்த்தொழில் தொகுப்பானது டெஸ்ட்ராயர், ஃபிரிகேட் முதலான கப்பற்படையின் பல்வேறு கப்பல்களில் பயன்படுத்தப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT