Published : 19 Nov 2021 02:11 PM
Last Updated : 19 Nov 2021 02:11 PM
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த ஓர் ஆண்டாக போராடிய நிலையில், அந்த 3 சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி இன்று அறிவித்தார்.
கடந்த ஓர் ஆண்டாக கடும் வெயில், கொட்டும்மழை, உறைபனி ஆகியவற்றுக்கு மத்தியில் டெல்லியின் புறநகரில் குடில்களை அமைத்துப் போராடிய விவாயிகளுக்குகிடைத்த வெற்றியாகவே அவர்கள் பார்க்கிறார்கள். இருப்பினும், நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் அமைப்பினர் தெரிவித்தனர்.
விவசாயிகள் கடந்த ஓர் ஆண்டாக நடத்திய இந்தபோராட்டத்தில் 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர், ஏராளமான இழப்பைச் சந்தித்தனர். இருப்பினும் விவசாயிகளின் விடாத முயற்சி, அமைதியான வழியில் நடத்திய போராட்டத்தால் சட்டங்களை திரும்பப் பெறப் பட உள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு இது 2-வது மிகப்பெரிய சறுக்கலாகும். ஏற்கெனவே நிலம் கையகப்படுத்தும் சட்டம் என்று பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தவுடன் கொண்டுவந்தார். நாட்டின் பல்வேறு திட்டங்களுக்காக, விவசாயிகளிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்தும் சட்டத்துக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது.
மக்களவையில் இந்தச் சட்டம் நிறைவேறினாலும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் பலம் அதிகமாக இருந்ததால், இந்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் அதை மத்திய அரசு கிடப்பில் போட்டு மாநிலங்களவையில் நிறைவேறாமல் போனது
அதற்கு அடுத்தார்போல் 3 சட்டங்களை நிறைவேற்ற அதை செயல்படுத்த முடியாமல் விவசாயிகள் நடத்திய அறப்போராட்டம், சட்டப்போராட்டம் காரணமாக 3 வேளாண் சட்டங்களும் முடக்கப்பட்டன. இந்த 3 சட்டங்களையும் செயல்படுத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றமும் இடைக்கால உத்தரவிட்டது. இந்த சட்டங்களை ஆய்வு செய்ய வல்லுநர்கள் குழுவையும் அமைத்தது.
ஆனால், விவசாயிகளின் தொடர் போராட்டம், அடுத்துவரும் 5 மாநிலத் தேர்தல்கள், இடைத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த பின்னடைவு போன்றவற்றை கருத்தில் கொண்டு 3 சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
ஆனால், இந்த சட்டங்களை வாபஸ்பெறுவதாகத்தான் பிரதமர் மோடி கூறியுள்ளாரேத் தவிர முழுமையாக திரும்பப் பெறவில்லை. ஒரு சட்டத்தை நிறைவேற்ற என்னமாதிரியான நடைமுறைகள் பின்பற்றப்படுமோ அதே நடைமுறைதான் வாபஸ் பெறவும் பயன்படுத்தப்படும்.
வேளாண் சட்டங்களை மத்திய அரசு இரு வழிகளில் வாபஸ் பெற முடியும். முதல் வழி- சட்டங்களை திரும்பப்பெறுவதற்காக தனியாக மசோதாவை அறிமுகம் செய்து அதை இரு அவைகளிலும் நிறைவேற்றி சட்டங்களைத் திரும்பப் பெற முடியும்.
2வதாக, அவசரச்சட்டங்களைப் பிறப்பித்து, 3 சட்டங்களையும் திரும்பப்பெறுவதாக அறிவிக்கலாம். ஆனால், அடுத்த 6 மாதத்துக்குள் அந்த அவசரச்சட்டத்துக்குப் பதிலாக மசோதா கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.
முன்னாள் சட்டத்துறை செயலாளர் பி.கே.மல்ஹோத்ரா செய்திநிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ அரசியலமைப்புச்சட்டப்படி எவ்வாறு சட்டம் இயற்றப்படுகிறதோ அதே முறையில்தான் சட்டத்தை திரும்பப் பெறவும் வேண்டும். இதைத்தவிர வேறு வழியில்லை.இதற்குஒரே மசோதாவைக் கொண்டுவந்துகூட 3 சட்டங்களையும் அரசால் வாபஸ் பெற முடியும். அரசியலமைப்புச்சட்டம் 245பிரிவு நாடாளுமன்றத்துக்கு சட்டங்களைஇயற்றவும், அதை திருத்தம் செய்து, திரும்பப்பெறவும் அதிகாரம் வழங்குகிறது” எனத் தெரிவித்தார்
கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு திரும்பப் பெறுதல் மற்றும் திருத்தப் பிரிவு ஆகியவற்றில் 58 சட்டங்களை திரும்பப் பெற்றது, வருமானவரிச் சட்டத்திலும், இந்திய நிறுவன நிர்வாகச் சட்டங்களிலும் சிறிய மாற்றங்களைச் செய்தது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு தனது முதல் முறை ஆட்சியில் இதுவரை 1,428 சட்டங்களை திரும்பப் பெற்றுள்ளது. ஒரு புதியசட்டம் பல புதிய அம்சங்களுடன் நிறைவேற்றப்பட்டவுடன், அந்த சட்டத்தின் பழைய வடிவம் நீக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT