Published : 19 Nov 2021 01:51 PM
Last Updated : 19 Nov 2021 01:51 PM
3 விவசாயச் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளை குண்டர்கள், பயங்கரவாதிகள், துரோகிகள் என விமர்சித்தவர்கள் தற்போது தேர்தலுக்காக அந்த சட்டங்களை வாபஸ் பெற்றுள்ளனர் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டு மக்களுக்கு இன்று காலை உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அதிரடியாக அறிவி்ததார். அவர் கூறிகையில் "விவசாயிகளின் நலனுக்காகவே மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. ஆனால், ஒரு பகுதி விவசாயிகளின் ஒருபகுதியினர் இந்தச் சட்டத்தை எதிர்த்தனர். வேளாண் சட்டங்களின் நன்மைகளை விவசாயிகளிடம் விளக்கி எடுத்துச் செல்ல முயற்சித்தோம். போராடிய விவசாயிகளுடன் பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
சில திருத்தங்களைக் கூட மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினோம். விவசாயிகள் நீதிமன்றம் சென்றனர். மூன்று வேளாண் சட்டங்களுக்காக போராடிய விவசாயிகளிடம் ஆதரவைப் பெற முடியவில்லை. இந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற நாங்கள் முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான நடவடிக்கைகள் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ளப்படும். இதனால், விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு களப் பணிகளுக்குத் திரும்ப வேண்டும்" என்று பேசினார்.
இதற்கு விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். லக்னோவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா கூறியதாவது:
விவசாயிகளின் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. 3 விவசாயச் சட்டங்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. குண்டர்கள், பயங்கரவாதிகள், துரோகிகள்
விவசாயிகளை மத்திய அரசின் பிரநிதிநிதிகள் சந்திக்காதது ஏன்.
அந்தோலன்ஜீவி, இப்படியெல்லாம் விவசாயிகளை யார் அழைத்தது. இதையெல்லாம் பேசும் போது பிரதமர் மவுனம் காத்தது ஏன். அந்தோலன்ஜீவி என்ற வார்த்தையை அவரே உச்சரித்தார்.
துன்பப்படும் விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டது. அவர்கள் கைது செய்யப்பட்டது யாரால்? விவசாயச் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்று நீக்கப்படும் என்று சொல்கிறீர்கள். நாங்கள் உங்களை எப்படி நம்புவது? இந்த நாட்டில் விவசாயிகளை விட பெரியவர்கள் யாரும் இல்லை என்பதை அரசு புரிந்துகொண்டதில் மகிழ்ச்சி.
ஏன் இப்படி செய்கிறார்கள்? தேர்தல் நெருங்கி வருவதை தேசம் புரிந்து கொண்டுள்ளது. இதனை அவர்களும் உணர்ந்திருக்கலாம். நிலைமை சரியில்லை என்பதை அவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் பார்க்க முடிகிறது. எனவே, தேர்தலுக்கு முன்பாக மன்னிப்பு கேட்க வந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT