Published : 16 Nov 2021 02:33 PM
Last Updated : 16 Nov 2021 02:33 PM
கோயிலில் தேங்காய் உடைப்பது, தீபாராதனை காட்டுவது போன்றவை சம்பிரதாய நடைமுறை, இதுபோன்ற கோயில் சம்பிரதாயங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் இன்று தெளிவுப்படுத்தியுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த ஸ்ரீவாரி தாதா என்பவர் திருப்பதி கோயிலில் பூஜை செய்வதில் சம்பிரதாய முறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார். அவர் ''இந்த பிரச்சினை அடிப்படை உரிமைகள் சம்பந்தப்பட்டது'' என்று வாதிட்டார்.
தினசரி கோயில் பழக்கவழக்கங்கள் விவகாரங்கள் நீதிமன்றங்கள் நுழையக்கூடிய ஒன்றல்ல எனவும், உலகப் புகழ்பெற்ற திருப்பதி வெங்கடேசப் பெருமாள் பூஜை சடங்குகளில் சம்பிரதாயங்கள் மீறப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் தலையிட முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
இவ்வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ஹிமா கோலி கோஹ்லி ஆகியோரின் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து கூறியதாவது:
''தேங்காயை எப்படி உடைப்பது, தீபாராரதனை எப்படி காட்டுவது போன்றவற்றில் எல்லாம் நீதிமன்றங்கள் எப்படி தலையிட முடியும்? இதுபோன்றவை கோயில் பழக்கவழக்கங்கள் எல்லாம் சம்பிரதாய நடைமுறைகள் ஆகும், இவை நீதிமன்றங்கள் தலையிட்டு தீர்க்கக்கூடிய பிரச்சினைகள் அல்ல. இதுதொடர்பாக எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?
அதேநேரம், கோயிலில் வழிபட வருவோரிடம் ஏதாவது பாரபட்சம் காட்டியிருந்தால், அல்லது தரிசனத்தை அனுமதிக்காதது உள்ளிட்ட நிர்வாகப் பிரச்னைகள் இருந்தால் மட்டுமே, நீதிமன்றங்கள் தலையிட முடியும்,
அப்படிப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக மனுதாரருக்கு எட்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிடலாம். கோயில் சம்பிரதாயங்கள் தொடர்பாக தலையிட முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.''
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
செப்டம்பரில் நடந்த முந்தைய விசாரணையில், தலைமை நீதிபதி ரமணா கூறுகையில், "நீங்கள் ஒரு பாலாஜி பக்தர். பொதுவாகவே பாலாஜி பக்தர்களுக்கு பொறுமை உண்டு. ஆனால் உங்களுக்கு அந்தப் பொறுமை இல்லை. இன்னொரு விஷயம் எங்கள் குடும்பமும் பாலாஜியை வழிபடும் குடும்பம்தான்.'' பாலாஜியின் பக்தர் என்ற முறையில் அவர் அதிக பொறுமையைக் காட்ட வேண்டும்'' என்று மனுதாரருக்கு ஆலோசனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT