Published : 16 Nov 2021 09:45 AM
Last Updated : 16 Nov 2021 09:45 AM
கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவிடமிருந்து மும்பை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் ரூ.5 கோடி மதிப்பிலான இரண்டு வெளிநாட்டு கைக்கடிகாரங்களைப் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியானது.
துபாயில் இருந்து திரும்பியபோது மும்பை விமான நிலையத்தில் ஹர்திக் பாண்டியாவிடம் இந்த கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், இதனை மறுத்துள்ள ஹர்திக் பாண்டியா, ”என்னிடமிருந்து இரண்டு கைக்கடிக்காரங்கள் பறிமுதல் செய்யப்படவில்லை. ரூ.1.5 கோடி மதிப்பிலான ஒரே ஒரு கைக்கடிகாரம் மட்டுமே என்னிடம் இருந்தது. அதுவும், விமான நிலையத்துக்கு வந்ததும் நானே முன்வந்து சுங்கத் துறை அதிகாரிகளிடம் சென்று நான் கைக்கடிகாரம் கொண்டு வந்திருக்கும் தகவலைத் தெரிவித்தேன். ஆனால், சமூக ஊடகங்களில் நான் ஏதோ ஏமாற்றும் நோக்கில் கைக்கடிகாரத்தை மறைத்துக் கொண்டு வந்ததுபோல் தகவல் வெளியாகியிருக்கிறது.
நான் அந்தக் கைக்கடிகாரத்தை துபாயில் வாங்கினேன். அதற்கான சுங்க வரியை எங்கு கட்டச் சொன்னாலும் அதனைக் கட்ட நான் தயாராகவே இருந்தேன். நான் கடிகாரத்தைப் பற்றி சொன்னவுடன் அவர்கள் என்னிடம் அதற்கான ஆவணங்களைக் கேட்டனர். நான் ஆவணங்களைக் கொடுத்துள்ளேன். அவர்கள், அதற்கான சுங்க வரி மதிப்பீட்டைச் செய்து வருகின்றனர். அவர்கள் மதிப்பிட்டு தொகையைச் சொன்னவுடன் நான் வரியைச் செலுத்தப் போகிறேன்.
நான் தேசத்தின் சட்டத்தை மதித்து நடக்கும் நபர். நான் அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளையும் மதிக்கிறேன். எனது கோரிக்கைகளுக்கு சுங்கத் துறையினர் ஒத்துழைப்பு தந்துள்ளனர். நானும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். நான் சட்டத்தை மீறிவிட்டதாக பரவும் தகவல்கள் பொய். அதேபோல், நான் கொண்டுவந்த கைக்கடிகாரத்தின் மதிப்பு ரூ.5 கோடி என்பதும் தவறானது” என்று கூறி விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு மும்பை சர்வதேச விமான நிலையத்தில் ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் க்ருணால் பாண்டியா ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் தொடர்பாக சுங்கத் துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT