Published : 15 Nov 2021 09:20 AM
Last Updated : 15 Nov 2021 09:20 AM
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாமலேயே முதல்வர் பதவியை பலரும் வகித்துள்ளனர். ஆனால், இந்தப் போக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவால் தற்போது மாறத் தொடங்கி உள்ளதாகக் கருதப்படுகிறது.
உ.பி. மாநிலத்தில் முதல்வர் பதவி ஏற்கும் கட்சி தலைவர்களில் பெரும்பாலானவர்கள் தேர்தலில் போட்டியிடாத நிலை உள்ளது. முதல்வராக இருந்த முலாயம் சிங்கிற்கு பின் இந்த வழக்கம் உ.பி.,யில் தொடங்கியது.
இப்பட்டியலில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதியின் தற்போதைய தலைவர் அகிலேஷ்சிங் யாதவ், பாஜகவின் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இவர்கள் நாடாளுமன்ற மக்களவையின் எம்.பியாக இருந்து முதல்வர் பதவிக்கு வந்தனர். இதில், மாயாவதி மட்டும் மாநிலங்களவையில் இருந்தார். முதல்வர் பதவிக்காக இவர்கள் அம்மாநில மேலவை உறுப்பினராக தேர்வாகும் சூழலும் நிலவுகிறது.
இந்நிலையில், இந்தமுறையும் தான் போட்டியிடப் போவதில்லை என சமாஜ்வாதியின் முதல்வர் வேட்பாளரான அகிலேஷ் இம்மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தார். இதன் ஒரு வாரத்திற்கு பின் பாஜக முதல்வரான யோகி ஆதித்யநாத் சட்டப்பேரவை தேர்தலில் தான் போட்டியிடத் தயார் என்றார்.
உ.பி.யிலுள்ள 403 தொகுதிகளில் தம் கட்சியின் ஆட்சிமன்றக் குழு தேர்வு செய்யும் தொகுதியில் தான் போட்டியிடுவதாகவும் முதல்வர் யோகி தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு பொதுமக்கள் இடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனால், முதல்வர் யோகி அறிவிப்பிற்கு உ.பி. அரசியல் தலைவர்கள் போக்கில் மாற்றம் தெரியத் தொடங்கி உள்ளது. முதல்வர் யோகியின் தேர்தல் போட்டி அறிவிப்பிற்கு முன்னாள் முதல்வர் அகிலேஷும் தனது நிலைப்பாடை மாற்றும் சூழல் தெரிகிறது.
இதன் மீது செய்தியாளர்கள் எழுப்பியக் கேள்விக்கு அவர் போட்டியிடுவதில், தம் கட்சி எடுக்கும் முடிவிற்கு தாம் கட்டுப்படுவதாகப் பதில் அளித்தார். இதேபோன்ற அறிவிப்பு , மாயாவதியிடமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான்கு முறை உபி முதல்வராக இருந்த அவரது பகுஜன் சமாஜ் கட்சியினரும் தங்களின் தலைவர் மாயாவதியை தேர்தலில் போட்டியிட வைக்க விரும்புவதாகத் தகவல்கள் வெளியாகின்றன. முதல்வர் யோகி அறிவிப்பு அவரது துணை முதல்வர்களையும் நெருக்கடிக்கு உள்ளாக்கி உள்ளது.
மேலவை உறுப்பினராகி உ.பி. துணை முதல்வராகப் பதவி வகிப்பவர்களான டாக்டர்.தினேஷ் சர்மா மற்றும் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோரும் தேர்தலுக்காக தொகுதிகளைத் தேடத் தொடங்கி விட்டனர்.
இவர்கள் போட்டியிடும் தொகுதிகளாக பாஜக ஆதிக்கம் அதிகமுள்ள தலைநகரான லக்னோவும், சிராத்துவும் பேசப்படுகின்றன. முதல்வர் யோகிக்கான தொகுதிகளாக அவர் மக்களவை எம்.பியாக இருந்த கோரக்பூர் அல்லது அயோத்தியா தேர்வாகும் நிலை தெரிகிறது.
நாடாளுமன்ற எம்.பி.,யாகவோ அல்லது எந்த பதவிகளும் இல்லாமலே நேரடியாக யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம். எனினும், இவர்கள் அடுத்த ஆறு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாவது அவசியம்.
இல்லையேல், அம்மாநிலத்தின் மேலவை உறுப்பினராக தேர்வாக வேண்டும். இதுபோன்ற மேல் சபைகள், இந்தியாவில் உ.பி, பிஹார், மகராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகம் ஆகிய ஆறு மாநிலங்களில் மட்டும் உள்ளது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT