Published : 19 Mar 2016 07:27 AM
Last Updated : 19 Mar 2016 07:27 AM
ஹைதராபாதில் ரூ. 10 கோடி கேட்டு 10-ம் வகுப்பு மாணவர் கடத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை சந்தேகத்தின் பேரில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத் கோஷா மஹால் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் பிளாஸ்டிக் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவருக்கு அபய் (16), அபிஷேக் (16) எனும் இரட்டையர் மகன்கள். இருவரும் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை மாலை அபய், வீட்டுக்கருகே உள்ள ஒரு ஓட்டலில் இட்லி வாங்க பைக்கில் சென்றார். ஆனால் அவர் வராத காரணத்தினால், அவரது தாயார் அனுராதா, அபய்க்கு போன் செய்தார். அப்போது “இன்னும் 5 நிமிடத்தில் வருகிறேன்” என அபய் கூறினார். ஆயினும் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் மகன் வராததால் மீண்டும் போன் செய்தார் அனுராதா. அப்போது போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் பயந்த அனுராதா மற்றும் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் அபய்யை தேடினர். அவர் கிடைக்காததால் போலீஸில் புகார் தெரிவித்தனர்.
சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் தந்தை ராஜ் குமாருக்கு ஒரு மர்ம நபர் போன் செய்து, ‘‘ரூ. 10 கோடி கொடுத்தால் உன் மகனை உயிரோடு விடுவிக்கிறோம்’’ எனக் கூறினார். இதற்கு, “அவ்வளவு பணம் என்னிடம் இல்லை” என ராஜ் குமார் தெரிவித்தார். “இதை ஒப்பு கொள்ள முடியாது. ரூ. 5 கோடியாவது கொடுத்து உன் மகனை மீட்டு செல்” என மர்ம நபர்கள் கூறி உள்ளனர். “அதற்கு ரூ. 5 லட்சம் கொடுக்கிறேன். அதற்கு மேல் என்னிடம் கிடையாது. தயவு செய்து என் மகனை உயிரோடு விட்டு விடுங்கள்” என ராஜ் குமார் மன்றாடினார்.
இதற்கு மர்ம நபர்கள் ஒப்பு கொள்ளவில்லை. பின்னர் மீண்டும் இரவு 11 மணிக்கு ரூ. 5 கோடி கேட்டு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்நிலையில் புதன் கிழமை இரவு 11. 15 மணியளவில், செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே ஒரு அட்டைப்பெட்டியில் மாணவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக செகந்திராபாத் போலீஸார் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற அபய்யின் பெற்றோர் இது தங்களது மகன் தான் என அடையாளம் காட்டி கதறி அழுதனர். செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத 3 மர்ம நபர்கள் ஓர் அட்டைப் பெட்டியை கொண்டு வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இவர்கள் கொடுத்த அடையாளத்தின் படியும், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையிலும் விஜயவாடாவில் 3 பேரை போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT