Published : 11 Nov 2021 04:18 PM
Last Updated : 11 Nov 2021 04:18 PM
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் தன்னுடைய புத்தக வெளியீட்டு விழாவில், இந்து மதத்தை அவமதிக்கும் நோக்கில் பேசியதாகக் குற்றம் சாட்டி இரு வழக்கறிஞர்கள் டெல்லி போலீஸில் புகார் செய்துள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், “சன்ரைஸ் ஓவர் அயோத்யா-நேஷன்ஹூட் இன் அவர் டைம்ஸ்” எனும் தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். இந்த நூல் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்த நூல் வெளியீட்டு விழாவில் சல்மான் குர்ஷித் இந்து மதத்தையும், ஐஎஸ் தீவிரவாதி இயக்கம், போக்கோஹராம் தீவிரவாத அமைப்பு ஆகியவற்றை ஒப்பிட்டுப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் இருவர் சல்மான் குர்ஷித்துக்கு எதிராக போலீஸில் புகார் அளித்துள்ளனர். வழக்கறிஞர் விவேக் கார்க் தனது புகாரில் கூறியுள்ளதாவது:
''காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சல்மான் குர்ஷித் சமீபத்தில் அவரின் புத்தக வெளியீட்டு விழாவில் இந்து மதத்தையும், ஐஎஸ், போக்கோஹராம் தீவிரவாத அமைப்புகளோடு ஒப்பிட்டுப் பேசியுள்ளார். தீவிரவாத அமைப்புகளைச் சட்டரீதியாக அங்கீகரிக்கும் வகையில் அவரின் கருத்துகள் உள்ளன. இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் இரு பிரிவினருக்கு இடையே மோதலை உருவாக்கும் விதத்திலும் அவரது கருத்து உள்ளது.
நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் பேச்சு, எழுத்து சுதந்திரத்தை வழங்கியுள்ளது. ஆனால், அதைத் தவறாகப் பயன்படுத்தி நாட்டின் ஒற்றுமைக்கும், மரியாதைக்கும் அவமதிப்பு தேடக்கூடாது. குடிமக்களை வகுப்பு, மதரீதியாகத் தூண்டிவிடுவதும், தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தைப் பயன்படுத்துவதும் பெரிய குற்றம்.
இந்து மதத்தை ஐஎஸ், போக்கோஹராம் தீவிரவாத அமைப்போடு ஒப்பிட்டு சல்மான் குர்ஷித் பேசியுள்ளார். இது ஒட்டுமொத்த இந்து சமூக மக்களையும், மதத்தின் மீதான மதிப்பு, சமூகத்தின் மதிப்பையும் கேள்விக்குள்ளாகியுள்ளது. ஆதலால், சல்மான் குர்ஷித் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் ஐபிசி பிரிவு 153, 153ஏ, 298, 505(2) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT