Published : 11 Nov 2021 02:13 PM
Last Updated : 11 Nov 2021 02:13 PM
ரிசர்வ் வங்கியின் 2 புதுமையான வாடிக்கையாளர் சேவை திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 12ம் தேதி காலை 11 மணிக்கு காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.
இவை, ஆர்பிஐ சில்லறை நேரடி திட்டம் மற்றும் ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த குறைதீர்ப்பு திட்டம் ஆகியவை ஆகும்.
சில்லறை முதலீட்டாளர்கள் அரசு பங்குகளுக்கான சந்தையை அணுகுவதை மேம்படுத்துவதுதான் ஆர்பிஐ சில்லறை நேரடித் திட்டத்தின் நோக்கம். மத்திய, மாநில அரசுகள் வெளியிடும் பங்குகளில் நேரடியாக முதலீடு செய்வதற்கான புதிய வழியை இது வழங்குகிறது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் அரசு பங்குகளை வாங்குவதற்கான கணக்கை, ரிசர்வ் வங்கியுடன் எளிதாக தொடங்கி பராமரிக்க முடியும். இதற்கு கட்டணம் ஏதும் இல்லை.
ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த குறைதீர்ப்புத் திட்டம், ரிசர்வ் வங்கியால் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் நிறுவனங்களுக்கு எதிரான வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு தீர்வு காணும் முறையை மேலும் மேம்படுத்தும். இந்தத் திட்டத்தின் நோக்கம், ஒரே இணையதளத்தில், ஒரே இ-மெயிலில், ஒரே முகவரியில் ‘ஒரே நாடு-ஒரே குறைதீர்ப்பு முறையை ஏற்படுத்துவதுதான்.
இதில் வாடிக்கையாளர்கள் தங்கள் குறைகளை தெரிவித்து எளிதில் தீர்வு காணலாம். புகார்களை பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பு எண் வழங்கப்படும். அதன் மூலம் புகார்களின் நிலவரத்தையும், தங்கள் கருத்தையும் ஆன்லைன் மூலம் தெரிவிக்கலாம். மேலும், பல மொழிகளில் பதில் அளிக்க கூடிய இலவச எண்ணும் இதில் உள்ளது. இது குறைகளை தீர்ப்பது தொடர்பான தகவல்களையும், புகார்களை பதிவு செய்வதற்கான உதவியையும் வழங்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT