Published : 08 Nov 2021 02:51 PM
Last Updated : 08 Nov 2021 02:51 PM

இந்தியாவில் 18 லட்சம் குழந்தைகள் தீவிரமான ஊட்டச்சத்துக் குறைவால் பாதிப்பு: குஜராத், பிஹார், மகாராஷ்டிரா மோசம்: தமிழகத்தில் எவ்வளவு?

பிரதிநிதித்துவப்படம்

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 33 லட்சம் குழந்தைகளுக்கும் அதிகமாக ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 18 லட்சத்துக்கும் ேமற்பட்ட குழந்தைகள் தீவிரமான ஊட்டச்சத்துக் குறைவால் பாதி்க்கப்பட்டுள்ளனர் என்று மத்திய மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செய்தி நிறுவனம் மூலம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

கரோனா தொற்றுக்குப்பின் குழந்தைகளுக்கு உடல்ரீதியான பிரச்சினைகள், சரிவிகித ஊட்டச்சத்துணவு கிைடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, குறிப்பாக ஏழைக் குடும்பங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த சிக்கல் அதிகமாக ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 34 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 36 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 2021,அக்டோபர் 14ம் தேதி நிலவரப்படி நாட்டில் 17.76 லட்சம் குழந்தைகள் தீவிரமான ஊட்டச்சத்துக் குறைவாலும், 15.46 லட்சம் குழந்தைகள் மிதமான ஊட்டச்சத்துக் குறைவாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் முதல் 2021 அக்டோபர் 14ம் தேதிக்கு இடையே நாட்டில் தீவிரமான ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 91 சதவீதம் அதிகரித்துள்ளது கவலைக்குரியது. கடந்த 2020ம் ஆண்டு நவம்பரில் 9.27 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்ட நிலையில் அடுத்த 11 மாதங்களில் 17.76 லட்சமாக அதிகரித்துள்ளது.

மத்தியஅரசின் போஷான் டிராக்கர் குறிப்பிடுகையில், நாட்டிலேயே அதிகமாக ஊட்டச்சத்துக் குறைவால் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பது மகாராஷ்டிராவில்தான். இங்கு 6.16 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக்குறைவாலும், அதில் 1.57 லட்சம் மிதமான ஊட்சத்துக் குறைவாலும், 4.58 லட்சம் குழந்தைகள் தீவிரமான ஊட்டச்சத்துக் குறைவாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த இடத்தில் பிஹாரில் 4.75 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 3-வது அதிகபட்சமாக, 3.20 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் 1.55 லட்சம் குழந்தைகள் மிதமான ஊட்டச்சத்துக் குறைவாலும், 1.65 லட்சம் குழந்தைகள் தீவிரமான ஊட்டச்சத்துக் குறைவாலும் பாதி்க்கப்பட்டுள்ளனர்.

ஆந்திராவில் 2.76 லட்சம் குழந்தைகள், கர்நாடகாவில் 2.49 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உ.பியில் 1.86 லட்சம் குழந்தைகள், தமிழகத்தில் 1.78 லட்சம்,அசாமில்1.76 லட்சம், தெலங்கானாவில் 1.52 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதி்க்கப்பட்டுள்ளனர்.

உலக பட்டினிக் குறியீட்டிலும் இந்தியா கடந்த 2020ம் ஆண்டில் 94 இடத்தில் இருந்தநிலையில் 2021ம் ஆண்டில் 101 இடத்துக்குச் சரிந்து நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தானுக்கும் பின்தங்கியிருக்கிறது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x