Last Updated : 08 Nov, 2021 02:47 PM

1  

Published : 08 Nov 2021 02:47 PM
Last Updated : 08 Nov 2021 02:47 PM

பஞ்சாபில் பாஜக தனித்து போட்டி: கேப்டன் அம்ரீந்தர்சிங்கிற்கு பின்னடைவு

புதுடெல்லி

பஞ்சாபின் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டியிட தேசிய செயற்குழு முடிவு செய்துள்ளது. இது, காங்கிரஸிலிருந்து வெளியேறி புதியக் கட்சி துவக்கிய கேப்டன் அம்ரீந்தர்சிங்கிற்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் ஆளும் பஞ்சாபில் அடுத்த வருடம் துவக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இச்சூழலில் அக்கட்சியினுள் உருவான உட்பூசலால், முதல்வராக இருந்த கேப்டன் அம்ரீந்தர்சிங் ராஜினாமா செய்திருந்தார்.

தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்தவர், ’பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ எனும் பெயரில் புதிய கட்சியை துவக்குவதாக அறிவித்தார். இக்கட்சி சார்பில் பஞ்சாபின் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பது அவரது திட்டமாக இருந்துள்ளது.

இந்நிலையில், நேற்று டெல்லியில் பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பஞ்சாபின் 117 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அம்மாநில பாஜக தலைவர் அஸ்வினி சர்மா அறிவித்துள்ளார்.

தற்போதைக்கு எவருடனும் கூட்டணி வைக்கும் எண்ணத்தில் கட்சி இல்லை எனவும் அஸ்வின் கருத்து கூறியுள்ளார். இதற்கு முன் பஞ்சாபின் முக்கிய கட்சியான சிரோமணி அகாலி தளத்துடன் பாஜகவின் கூட்டணி இருந்தது.

பாஜக ஆதரவுடன் அக்கட்சியின் பழமையான கூட்டணியான அகாலில் தளத்தின் முதல்வர் ஆட்சியில் இருந்தார். மத்தியிலும் தொடர்ந்த இக்கூட்டணி, வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இவை வாபஸ் பெறாததை காரணம் காட்டி பாஜகவின் கூட்டணியையும் முறித்துக் கொண்டது அகாலி தளம். இதனால், பாஜக பஞ்சாபில் தனித்து போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பாஜகவின் இந்த அறிவிப்பு, அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவிருந்த கேப்டன் அம்ரீந்தருக்கு பின்னடைவு எனக் கருதப்படுகிறது. ஏனெனில், தனது தனிப்பட்டக் கொள்கைகள் காரணமாக அகாலி தளம் மற்றும் முக்கிய எதிர்கட்சியான ஆம் ஆத்மி ஆகியோருடன் அம்ரீந்தர் கூட்டணி வைக்க முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பஞ்சாபின் மூத்த பத்திரிகையாளர்கள் கூறும்போது, ‘‘தனது எதிர்கட்சிகளில் முக்கிய தலைவர்களை ஆதரவளிப்பது போல், தனிமைப்படுத்துவது பாஜகவின் உத்திகளில் ஒன்றாகும்.

இதற்கு தற்போது கேப்டன் அம்ரீந்தர் பலியாகி உள்ளார். பாஜகவின் இந்த முடிவால் வாக்குகள் சிதறும். இது பஞ்சாபில் வளர்ந்து வரும் ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமாகும் வாய்ப்புகள் உள்ளன’’ எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x