Published : 08 Nov 2021 10:47 AM
Last Updated : 08 Nov 2021 10:47 AM
தெலங்கானா பாஜக தலைவர் பந்தி சஞ்சய் உண்மைக்கு மாறான கருத்துக்கள் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் இல்லாவிட்டால், அவரின் நாக்கை நாங்கள் அறுத்துவிடுவோம் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் எச்சரித்துள்ளார்.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
விவசாயிகளை நெல் பயிரிடுங்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் பந்தி சஞ்சய் தவறான நம்பிக்கையை விதைக்கிறார். ஆனால், நெல் கொள்முதல் செய்கிறோம் என பாஜக தலைமையிலான மத்திய அரசு உறுதியளித்தபின் இதைக் கூற வேண்டும்.
ஆனால், மத்திய அரசோ நெல்கொள்முதல் செய்யப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளது. அதனால்தான் எங்கள் வேளாண் அமைச்சர் விவசாயிகளிடம் சென்று நெல் விவசாயம் செய்வதற்கு பதிலாக வேறு பயிர்களை விதையுங்களை என்று விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் அறிவுறுத்தினார். மத்திய அரசு தான் பொறுப்பற்ற வகையில் நடந்து கொள்கிறது
மத்திய அமைச்சரை நான் நேரடியாகச் சந்தித்து எங்கள் மாநிலத்தில் உள்ள நெல்லை கொள்முதல் செய்யுங்கள் எனக் கேட்டேன். ஆனால், அவரோ நான் அமைச்சரவையில் பேசி முடிவு எடுத்துவிட்டு என்னிடம் தெரிவிப்பதாக கூறினார். ஆனால், இதுவரை, எனக்கு எந்தப் பதிலும் இல்லை. தெலங்கானாவில் ஏற்கெனவே 5 லட்சம் டன் நெல் இருப்பு இருக்கிறது. ஆனால் மத்திய அரசுஇதுவரை வாங்கவில்லை.
மத்திய அரசோ நெல் கொள்முதல் செய்யமாட்டோம் என்கிறது, ஆனால் மாநில பாஜக தலைவரோ நெல் கொள்முதல் செய்யப்படும் என தவறான நம்பிக்கையை விவசாயிகளுக்கு ஊட்டுகிறார். இதுபோன்று மாற்றிப் பேசுவதையும், உண்மைக்கு மாறாகப் பேசுவதையும் பாஜக தலைவர் சஞ்சய் நிறுத்த வேண்டும்.
எங்களைப் பற்றி தேவையில்லாத கருத்துக்களைத் தெரிவித்தால் பாஜக தலைவர்களின் நாக்கை நாங்கள் அறுத்துவிடுவோம். என்னைசிறைக்கு அனுப்பிவிடுவேன் என்று சஞ்சய் மிரட்டியுள்ளார், துணிச்சல் இருந்தால் என்னை தொட்டுப் பார்க்கட்டும்.
அருணாச்சலப்பிரதேசத்தில் சீன ராணுவம் நம்மை தாக்கி வருகிறது. ஆனால், இதுவரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாய்கள் குரைக்க விடுவது நல்லது என்று நினைத்து இதுவரை அமைதியாக இருந்தோம் ஆனால் இனி அமைதி காக்க மாட்டோம். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள் மீது காரை ஏற்றி பாஜக தலைவர்கள் கொலை செய்கிறீர்கள். விவசாயிகளை அடித்துக் கொல்லுங்கள் என பாஜக முதல்வர் ஒருவர் பேசியுள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளுக்கு நாங்கள் ஆதரவு தருவோம், விவசாயிகளைக் காக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சியினர் தரம்தாழ்ந்த அரசியல் செய்கிறார்கள், விவசாயிகளின் உணர்வுகளுடன் விளையாடுகிறார்கள்.
கடந்த 7 ஆண்டுகளாக மத்தியில் ஆளும் பாஜக அரசு என்ன செய்தது. இந்தியாவின் தனிநபர் வருவாய் வங்கதேசம், பாகிஸ்தானைவிட குறைவாக இருக்கிறது. மத்திய அரசு தேவையில்லாமல் வரிகளை உயர்த்தி வருகிறது. பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதியின்படி ரூ.15 லட்சம் மக்களுக்கு கொடுத்தாரா, 2 கோடி வேலைவாய்ப்புகளை வழங்கினாரா.
இவ்வாறு சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT