Published : 07 Nov 2021 05:36 PM
Last Updated : 07 Nov 2021 05:36 PM
தேசத்தின் பொருளாதாரத்தை கரோனா மந்தநிலையிலிருந்து மீட்டு வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுவந்த பிரதமர் மோடிக்கு பாஜக தேசிய செயற்குழுவில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
பாஜக தேசிய செயற்குழுக்கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்ளிட்டமூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கரோனா விதிகளைப் பின்பற்றி தேசிய செயற்குழுக் கூட்டம் நடந்ததால், டெல்லியில் இருக்கும் பாஜக நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் மட்டும் நேரடியாக வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். டெல்லிக்கு வெளியே இருக்கும் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், காணொலி வாயிலாக பங்கேற்றனர். பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் காணொலி வாயிலாகப் பங்கேற்றனர்.
இந்த தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நிருபர்களுக்குப் பேட்டிஅளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
கரோனா மந்தநிலையிலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுவந்த பிரதமர் மோடிக்கு செயற்குழுவில் நன்றி தெரிவிக்கப்பட்டது. கரோனா பாதிப்பு ஏற்பட்ட காலத்திலிருந்து 80 கோடி மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்க எடுத்த பிரதமர் மோடியின் முடிவுக்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. கட்சின் முன்னாள் தலைவர்கள் அனைவரும் பிரதமர் மோடிக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.
கரோனா காலத்தில் முகக்கவசம், பிபிஇ ஆடைகள், ஆக்சிஜன், மருந்துகள் தேவை அதிகரித்தது. ஆனால், தேவை அதிகரிப்புக்கு ஏற்பக மக்களுக்கு தேவையான பொருட்கள் தட்டுப்பாடின்றி கிைடக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தது.
2020ம் ஆண்டு ஜனவரி மாதம் முதன்முதலில்இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டபோது, உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் என்ன செய்வது எனத் தெரியவில்லை.அடுத்த 9 மாதங்களில் பிரதமர் மோடி, பல்வேறு ஆராய்ச்சிக் கூடங்களிடம் பேசி, அறிவியல் வல்லுநர்களை ஊக்கப்படுத்தி கரோனா தடுப்பூசியை விரைவாகக் கண்டுபடிக்க உதவினார். இன்று இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது.
எப்போதெல்லாம் இதுபோன்ற மிகப்பெரிய பொருளாதாரச் சீர்குலைவு, போக்குவரத்து பாதிப்பு, பட்டினிகள் நடக்கிறதோ, அங்கு தேவையானவர்களுக்கு உணவு வழங்குவது சவாலாக இருக்கும்.
ஆனால், பிரதமர் மோடியின் நீண்டகால கண்ணோட்டத்தால், மிகப்பெரிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தி, ஒவ்வொரு மாதமும் 80 கோடி மக்களுக்கு ரேஷன் பொருட்களை கரோனா காலத்தில் ஒவ்வொரு மாதமும் மத்திய அரசு வழங்கியது. 5 கிலோ தானியங்கள், பருப்பு வகைகளை இலவசமாக மக்களுக்கு மத்திய அரசு வழங்கியது.
அதுமட்டுமல்லாமல் மந்தமாக இருந்த பொருளதாரத்தை மீண்டும் மீட்சிப் பாதைக்கு பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். பொருளாதாரம் இயல்புப் பாதைக்கு திரும்பியதற்கு ஜிஎஸ்டி வரிவசூல்தான் சாட்சியாகும்.
பாஜக தேசியச் செயற்குழுவில் முதன்முறையாக நவீன தொழில்நுட்பத்தின் மூலம் 342 நிர்வாகிகளில் 218 பேர் காணொலி வாயிலாகப் பங்கேற்றனர். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சிறப்புச் சட்டம் 370 பிரிவை ரத்து செய்தது, குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தியது ஆகியவற்றுக்கு பிரதமர் மோடிக்கு தேசியச் செயற்குழுவில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி பலவாறு கூறப்படுகிறது. கடந்த 2014ம் ஆண்டில் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ரூ.23 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது, ஆனால், கடந்த பட்ஜெட்டில் மத்தியில் ஆளும் பாஜக அரசு ரூ.1.23 லட்சம் கோடி ஒதுக்கியது. அனைத்து வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டு மிகுந்த பொறுப்புடன் அரசு செயல்படுகிறது.
சீக்கியர்களுக்கு தேவையான 4 முக்கிய அம்சங்களை மத்திய அரசு செய்துள்ளது. குருதுவாராவுக்கு எப்சிஆர்ஏ மானியம் வழங்கப்பட்டுள்ளது, லாங்கர் சமையல் கூடத்துக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டது, காரத்பூர் சாலைக்கு ரூ.120 கோடி செலவு செய்துள்ளது மத்திய அரசு
இவ்வாறு தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT