Published : 07 Nov 2021 04:05 PM
Last Updated : 07 Nov 2021 04:05 PM

காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ10, டீசல் ரூ.5 குறைப்பு

கோப்புப்படம்

லூதியானா

காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் பெட்ரோல் லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 5 ரூபாயும் வாட் வரி குறைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்தார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்ததன் எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வந்தன. இதனால் பெட்ரோல் லிட்டர் 100ரூபாயை நாடுமுழுவதும் கடந்தது, டீசலும் லி்ட்டர் 100 ரூபாய்க்கும் மேல் பலமாநிலங்களில் உயர்ந்தது. இதனால் நடுத்தர மக்கள், சாமானிய மக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர். எதிர்க்கட்சிகளும் மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கத்தொடங்கின.

இதையடுத்து, பெட்ரோல் மீதான உற்பத்தி வரிசை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்து கடந்த 3-ம்தேதி மத்திய அரசு அறிவித்து நடைமுறைக்கும் வந்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் முதல் பெட்ரோல் மீது மத்திய அரசு உற்பத்தி வரியாக லிட்டருக்கு ரூ.38.78 உயர்த்தியது, தற்போது அதில் ரூ.5 குறைத்திருக்கிறது. டீசலில் லிட்டருக்கு ரூ.29.03 உயர்த்திவிட்டு ரூ.10 குறைத்துள்ளது.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியைக் குறைத்ததையடுத்து, பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், கோவா, அசாம், திரிபுரா, குஜராத், கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால், பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வாட் வரி குறைக்கப்படவில்லை. மத்திய அரசு உற்பத்தி வரிையக் குறைத்தபின்பும் மாநில அரசுகள் வாட் வரியைக்குறைக்காதது குறித்து பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிைலயில், காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.10 , டீசல் ரூ.5 வாட் வரி குறைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தெரிவித்துள்ளார்.

இதுவரை பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை கர்நாடகா, புதுச்சேரி, மிசோரம், அருணாச்சலப்பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா, அசாம், சிக்கிம், பிஹார், கோவா, தாத்ரா நகர் ஹாவேலி, டாமன் டையு, சண்டிகர், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், ஒடிசா, மேகாலயா, லடாக், பஞ்சாப் மற்றும் மத்தியப்பிரதேசங்களில் வரிக் குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால், டெல்லி, மேற்கு வங்கம், கேரளா, ஆந்திரப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்படவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x