Published : 07 Nov 2021 12:45 PM
Last Updated : 07 Nov 2021 12:45 PM
சீனாவுக்கு நற்சான்று வழங்கியதை பிரதமர் மோடி திரும்பப் பெற்று, இந்திய எல்லையிலிருந்து சீனா ஆக்கிரமிப்புகளை அகற்ற கெடுவை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்திய எல்லையில் சீனா ஆக்கிரமப்புகளை நிலைநாட்டும் வகையில் தந்திரமான சில செயல்களை செய்துவருகிறது என்று அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சி இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் வெளியிட்ட ஆண்டறிக்கையில் “ சீனாவின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு மேம்பாட்டு” என்ற தலைப்பிலான அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் எல்லைப்பகுதிகள், இருநாடுகளுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய பகுதிகளில் சீனா 100 வீடுகளை கட்டி மக்களை குடியமர்த்தியுள்ளது.
திபெத் சுயாட்சிப்பகுதி, அருணாச்சலப்பிரதேசம் ஆகியவற்றுக்கு இடையிலான இந்தபகுதியிலும், சாரு சூ ஆற்றின் கரையிலும் இந்த குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பு முழுவதும் பெய்ஜிங் கட்டுப்பாட்டில் இருக்கிறது இந்திய எல்லையில் சீனா ஆக்கிரமப்புகளை நிலைநாட்டும் வகையில் தந்திரமான சில செயல்களை செய்துவருகிறது” எனத் தெரிவித்துள்ளது.
பென்டகன் அறிக்கையைச் சுட்டிக்காட்டி, காங்கிரஸ் எம்.பி. பவன் ஹேரா நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த ஆண்டு ஜூன் மாதம் அருணாச்சலப்பிரதேச கிழக்குத் தொகுதி பாஜக எம்.பி. தபிர் காவோ பிரதமர் மோடிக்கும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும் கடிதம் எழுதியிருந்தார். அதில், “ இந்திய எல்லையில் சீனப் படைகள் நிரந்தரமாக குடியிருப்புகளை கட்டுகிறார்கள்” எனத் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த வாதத்தை மத்திய அரசு மறுத்தது.
கடந்த 17 மாதங்களாக சீனாவுக்கு பிரதமர் மோடி நற்சான்று அளித்து வந்துள்ளார். இந்திய வரலாற்றில் இது கறுப்புப்பகுதி. பிரதமர் மோடியின் நற்சான்றைப் பயன்படுத்திய சீன அரசும், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழையவில்லை என்று உலகிறக்கு தெரிவிக்கிறார்கள்.
ஆனால் எல்லையில், இந்திய-சீன சூழல் குறித்து உண்மையான சூழலை அரசு கூற மறுக்கிறது. கடந்த ஆண்டு நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் மத்திய அரசு உண்மையைக் கூறவில்லை.
தற்போது பென்டகன் வெளியிட்ட ஆண்டறிக்கையில், இந்திய எல்லையிலும், சர்ச்சைக்குரிய பகுதியிலும் சீனா நிரந்தரமாக குடியிருப்புகளை எழுப்பிவருவதாகத் தெரிவித்துள்ளது.இந்த கிராமங்களில் கட்டப்படும் வீடுகளை மக்கள் பயன்படுத்தவும் ராணுவ வீரர்கள் தங்கவும் சீனா பயன்படுத்த உள்ளது.
எல்லையில் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம்அதிகரித்த நிலையில் சீனா, இந்தியா இடையிலான வர்த்தகம் 67 சதவீதம் அதிகரித்துள்ளது. சீனா செயலிகள் பலவவற்றை மத்திய அரசு முடக்கியபின்புதான், இந்த வர்த்தக உயர்வு ஏற்பட்டுள்ளது.
ஆதலால், பிரதமர் மோடி, சீனாவுக்கு அளித்த நற்சான்றை திரும்பப் பெற வேண்டும். இந்திய எல்லையிலிருந்து சீனா வெளியேற இறுதிக்கெடுவை பிரதமர் மோடி விதிக்க வேண்டும்
இவ்வாறு பவன் ஹேரா தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT