Published : 07 Nov 2021 03:06 AM
Last Updated : 07 Nov 2021 03:06 AM
தமிழகம் உள்பட 14 மாநிலங்களில் பெட் ரோல், டீசல் மீதான வரிக் குறைப்பு இன்னும் செய்யப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ.5 என்ற அளவிலும், டீசல் மீதான கலால் வரியை ரூ.10 என்ற அளவிலும் கடந்த 3-ம் தேதி குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. இதனால் 4-ம் தேதி நள்ளிரவில் இருந்து நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டது.
கலால் வரியை குறைத்த மத்திய அரசு, மக்கள் மேலும் பயனடையும் வகையில் மாநில அரசுகளும் வாட் வரியை குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. அதன்படி 22 மாநில மற்றும் யூனியன் பிர தேச அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளன.
கர்நாடக மாநில அரசு, பெட்ரோல் விலையை அதிகபட்சமாக ரூ. 13.35 வரை குறைத்துள்ளது. புதுச்சேரி ரூ. 12.85, மிசோரம் ரூ. 12.62 என்ற அளவில் குறைத்துள்ளது. கர்நாடக அரசு டீசல் விலையை ரூ. 19.49 என்ற அளவுக்கு குறைத்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியில் ரூ. 3 குறைப்பு செய்யப்பட்டது.
ஆனால், 14 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாட் வரியை குறைக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:
பாஜக ஆட்சி அல்லாத மற்ற கட்சிகள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 14 மாநிலங்களில் வாட் வரியை குறைப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப் படவில்லை.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைத்தபோதே, மாநில அரசுகளும் குறைக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டது. ஆனால் இதுவரை 14 மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்கவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து கேரள நிதியமைச்சர் கே.என். பாலகோபால் கூறும்போது, ''வாட் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறுவதில் எந்த அடிப்படையும் இல்லை. மாநிலங்களைவிட மத்திய அரசுக்குத்தான் பெட்ரோல் டீசலில் அதிகப்படியான வருவாய் கிடைக்கிறது. பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியில் குறைப்பு செய்ய வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது'' என்றார்.
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மத்திய அரசு மாநிலங்களுக்கு அளிக்கவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். இதனைப் பயன்படுத்தி பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியில் குறைப்பு செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வாட் வரி எப்போது குறைக்கப்படும் என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக டெல்லியில் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் கவுரவ் பாட்டீயா செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து பொதுமக்களின் சுமையை மத்திய அரசாலும் பாஜக ஆளும் மாநில அரசுகளாலும் குறைக்க முடியுமெனில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களால் ஏன் அதைச் செய்ய முடியாது?
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் பெட்ரோல் மீது ரூ.32.19 வாட் வரி விதிக்கப்படுகிறது. இது மகாராஷ்டிராவில் ரூ.31-ஆக உள்ளது. பெட்ரோல், டீசலை அதிக விலைக்கு விற்பனை செய்து பொதுமக்களிடம் மத்திய அரசு ‘பிக்பாக்கெட்’ அடிப்பதாகவும் பணம் பறிப்பில் ஈடுபடுவதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். தற்போது வாட் வரியை குறைக்காமல் காங்கிரஸ்தான் மிகப் பெரிய அளவில் ‘பிக்பாக்கெட்’ அடிக்கிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT