Published : 07 Nov 2021 03:06 AM
Last Updated : 07 Nov 2021 03:06 AM
இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு போதைபொருள் கடத்தல் மூலம் பண விநியோகம் நடைபெற்று வருவது தெரிய வந்துள்ளது.
குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த கப்பலில் 2,988.21 கிலோ எடையுள்ள போதைப் பொருள் பிடிபட்டது. போதைப்பொருள் வந்த 2 கன்டெய்னர்களும் விஜயவாடாவில் பதிவான ஆஷி டிரேடிங் கம்பெனி எனும் நிறுவனத்திற்கு சொந்தமானது.
விசாகப்பட்டினத்தை சேர்ந்த அந்நிறுவன உரிமையாளர்களான மச்சாவரம் சுதாகரன், துர்கா வைஷாலி, ராஜ்குமார் ஆகியோர் மீது வழக்குகள் பதிவானது. இவ்வழக்கை அமலாக்கத் துறை,வருவாய் துறை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகியவை விசாரித்தன.
கன்டெய்னர்களில் இருந்த போதைப் பொருளின் மதிப்பு சுமார் ரூ.21,000 கோடி. அந்நிறுவனம் துறைமுகத்திற்கு அளித்தகட்டணம் ரூ.4 லட்சம். இதையடுத்து இந்த வழக்கு தீவிரவாத நடவடிக்கைகளை விசாரிக்கும் மத்திய அரசின் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மாற்றப்பட்டது.
அக்டோபர் 2-ல் கோவா சென்ற சொகுசுக் கப்பலில் நடந்தசோதனையால், இந்த வழக்கு அதிக முக்கியத்துவம் பெறவில்லை. இந்நிலையில், தற்போதுகுஜராத் வழக்கின் மீது கவனம் திரும்பியுள்ளது. என்ஐஏ விசாரணையிலான இந்த வழக்கில், கடந்த அக்டோபர் 13-ல் ஆஷி நிறுவனத்தின் தொடர்புடைய குடோன்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள உ.பி.யின் நொய்டா என 5 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது. இதற்கு முன்பு சென்னை, கோயம்புத்தூர் மற்றும் விஜயவாடாவிலும் சோதனைகள் நடந்தன. இதுவரை இந்த வழக்கில் 8 பேர் கைதாகி உள்ளனர்.
இந்த 8 பேரில் பெரும்பாலான வர்களுக்கு கடத்தலுக்கு உதவி யதற்கான பணம் கிடைத்து விடுகிறது. ஆனால், அதன் முழு தொகை எங்கு செல்கிறது? யாரால் அனுப்பப்படுகிறது என்ற விவரம் தெரியவில்லை. இவ்வழக்கில் கைதானவர்களில், 4 பேர் ஆப்கானிஸ்தான் மற்றும் ஒரு இளம்பெண் உஸ்பெஸ்கிஸ்தானை சேர்ந்தவர்கள். சிறையிலுள்ள இவர்கள் விசா அனுமதியின்றி இந்தியாவில் இருந்தவர்கள் எனத் தெரிந்துள்ளது. ஆப்கானிஸ் தானியர்களுள் நொய்டாவில் வசித்து வந்த ஒருவருக்கு முக்கியப் பங்கிருப்பதாகத் தெரிந்துள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் என்ஐஏ அதிகாரிகள் வட்டாரங்கள் கூறும்போது, ‘துறைமுகம் வழியாக போதைப் பொருள் கடத்தப்பட்டு இந்தியா முழுவதிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் லாபத் தொகைகள் இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் இருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் இந்தியாவில் பலருக்கும் மறைமுக தொடர்புகள் இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது’ எனத் தெரிவித்தன.
இதற்கு முன்பு, ஜூன் 6-ம் தேதியில் அதிக அளவிலான போதைப்பொருள் கடத்தப் பட்டிருப்பது தெரியவந்தது. இதை டெல்லியின் அலிப்பூர் பகுதியிலுள்ள குல்தீப்சிங் என்பவர் பெயருக்கு மாற்றி விடப்பட்டுள்ளது.
ஒரு கன்டெய்னரில் வந்த இந்த போதைப்பொருள் முழுவதும் இந்தியாவில் விநியோகிக்கப்பட்டு விட்டதாகக் கருதப்படுகிறது. இவ்வழக்கையும் சேர்த்துவிசாரிக்கும் என்ஐஏ, குல்தீப் சிங்கையும் தீவிரமாகத் தேடி வருகிறது. இதுபோன்ற போதைபொருள் கடத்தலில் கிடைத்த பணம், நக்சலைட்டுகளின் நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப் பட்டுள்ளதா எனவும் விசாரிக் கப்பட்டு வருவதாக தெரிகிறது. எனவே, குஜராத் துறைமுக வழக்கில் மூலம், மேலும் பல அதிரடி தகவல்கள் வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT