Published : 06 Nov 2021 12:47 PM
Last Updated : 06 Nov 2021 12:47 PM

உலகப் பண்டிகையாகிறது தீபாவளி?- அமெரிக்காவில் தேசிய விடுமுறை அளிக்க ஏற்பாடு

புதுடெல்லி

தீபாவளியன்று தேசிய விடுமுறை அளிப்பதற்கான சட்டத்தை அமெரிக்கா கொண்டுவரத் தயாராகி வருவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.

இந்தியா மட்டுமின்றி உலக அளவில் இந்த ஆண்டு தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அமெரிக்க அதிபர் மாளிகையிலும் தீபாவளி கொண்டாடப்பட்டது. பாகிஸ்தான் இம்ரான் கான் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மைய கட்டடத்தில் முதன்முறையாக தீபாவளி கொண்டாப்பட்டுள்ளது. அந்த கட்டடத்தில் தீப விளக்கு எரிவதை போன்று அனிமேஷன் உருவாக்கப்பட்டு இருந்தது. ஹட்சன் நதிக்கரையின் இருபுறத்திலும் பட்டாசுகள் வெடித்து தீபாவளி கொண்டாடப்பட்டது.

அமெரிக்காவில் தீபாவளி நாளை விடுமுறையாக அறிவிக்கக் கோரும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியரான அமெரிக்க எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீபாவளி நாளை விடுமுறையாக அறிவிப்பது குறித்த மசோதாவை முன்மொழிந்தார்.

இதுபோலவே பிரிட்டனின் அரச குடும்பத்தின் ராயல் மின்ட் நிறுவனம், தீபாவளியை முன்னிட்டு கடவுள் மகாலட்சுமியின் உருவம் பொறித்த தங்கப் நாணயத்தை முதன் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

அனுராக் தாக்கூர்

இதுகுறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது:

தீபாவளியன்று தேசிய விடுமுறை அளிப்பதற்கான சட்டத்தை அமெரிக்கா கொண்டுவரத் தயாராகி வருகிறது. இந்த ஆண்டு உலக வர்த்தக மையக் கட்டிடத்தில் தீபாவளியை மையப்படுத்தி அனிமேஷன் படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் லட்சுமி தேவியின் உருப்படம் பொறித்த 5-பவுண்டு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. அதுபோலவே மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த 5-பவுண்டு நாணயமும் வெளியாகியுள்ளது. இதனால் தீபாவளி உலக பண்டியாகி வருகிறது. இந்தியாவின் அடையாளம், இந்தியாவின் கலாச்சார பலம் உலகம் முழுவதும் வலிமை பெற்று வருவதற்கு இவை சான்றுகள்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x