Published : 06 Nov 2021 10:47 AM
Last Updated : 06 Nov 2021 10:47 AM
அண்மையில் வெளியான 3 எம்.பி., 29 எம்எல்ஏ தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் 8 அம்சங்களை விளக்கி அறிக்கை கோரியது காங்கிரஸ்.
மத்தியப் பிரதேசத்தில் கந்த்வா, இமாச்சலப் பிரதேசத்தில் மண்டி, யூனியன் பிரதேசமான தாத்ரா நாகர் ஹவேலி ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அசாம் (5 தொகுதிகள்), மேற்கு வங்கம் (4), ம.பி., இமாச்சலப் பிரதேசம், மேகாலயா (தலா 3), பிஹார், கர்நாடகா, ராஜஸ்தான் (தலா 2), ஆந்திரா, ஹரியாணா, மகாராஷ்டிரா, மிசோரம், தெலங்கானா (தலா 1) என 13 மாநிலங்களில் 29 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த முடிவுகள் அண்மையில் வெளியாகின. இதில் பாஜக ஆளும் ஹரியாணா, இமாச்சல பிரதேச மாநில மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறவில்லை. இது, அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அதேபோல், சட்டப்பேரவைகளில் காங்கிரஸுடான நேரடிப் போட்டியில் பாஜக பெரும்பாலான இடங்களில் தோல்வியடைந்துள்ளது. இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா இதற்கு சாட்சி.
இந்நிலையில், அண்மையில் வெளியான 3 எம்.பி., 29 எம்எல்ஏ தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் காங்கிரஸ் மேலிடம் அறிக்கை கோரியுள்ளது. அந்தந்த மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும், மாநில பொறுப்பாளர்களும் அறிக்கையை அனுப்பவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும் சரி, தோல்வியடைந்திருந்தாலும் சரி அதற்கான காரணங்களை விளக்கக் கூறியுள்ளது.
இது தொடர்பாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிக்கை கோரியுள்ளார். அந்த அறிக்கையில் அவர் 8 அம்சங்களைக் குறிப்பிட்டு. அதன் அடிப்படையில் அறிக்கையைத் தயாரித்து அனுப்புமாறு பணித்துள்ளார்.
8 அம்சங்கள் என்னென்ன?
1.உங்கள் தொகுதியில் இடைத்தேர்தல் வரக் காரணம் என்ன?
2.வேட்பாளர் தேர்வு எப்படி நடந்தது?
3.பிரச்சார உத்தி எவ்வாறு வகுக்கப்பட்டது?
4.கூட்டணியால் ஏற்பட்ட விளைவு என்ன?
5.எதிர்க்கட்சிகள் ஏற்படுத்திய தாக்கம் என்ன?
6.இடைத்தேர்தல் முடிவால் மாநிலத்தில் அரசியல் நிலவரத்தில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்பட்டுள்ளது?
7.காங்கிரஸ் தேர்தல் முடிவு பற்றி நடத்தப்பட்ட ஆய்வு என்ன?
8.இவை தவிர இதர அம்சங்கள் ஏதேனும் உள்ளனவா?
பெட்ரோல், டீசல் வரி குறைப்பும் விமர்சனமும்:
இதற்கிடையில் தேர்தல் முடிவுகள் வெளியாகி சில நாட்களிலேயே பெட்ரோல், டீசல் மீதான உற்பத்திவரியை மத்திய அரசு குறைத்து அறிவித்தது.
சட்டப்பேரவை இடைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததன் பயம், அடுத்துவரும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அச்சம் காரணமாகவே பெட்ரோல், டீசல் மீதான உற்பத்திவரியை மத்திய அரசு குறைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT