Last Updated : 06 Nov, 2021 03:05 AM

7  

Published : 06 Nov 2021 03:05 AM
Last Updated : 06 Nov 2021 03:05 AM

உ.பி.யில் பாஜகவை வெல்ல வியூகம் அமைக்கும் பிரியங்கா: மாயாவதி, அஜித் சிங் கட்சிகளுடன் கூட்டணிக்கு முயற்சி

புதுடெல்லி

உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜகவை வெல்ல காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா புதிய வியூகம் அமைத்து வருகிறார். இதில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி), மறைந்த அஜித் சிங்கின் ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்எல்டி) ஆகிய கட்சிகளுடன் கூட்டணிக்கு முயற் சிக்கப்படுகிறது.

உ.பி.யில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. இங்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க முயற்சிக்கும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன. இதில், முன்னாள் முதல்வர் அகிலேஷ் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சி, சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைக் கிறது. மற்றொரு எதிர்க்கட்சியான காங்கிரஸ், உ.பி.யின் முக்கியக் கட்சிகளுடன் வலுவான கூட்டணி அமைக்க முயற்சிக்கிறது. மாயாவதியின் பிஎஸ்பி மற்றும் மறைந்த அஜித் சிங்கின் மகனான ஜெயந்த் சவுத்ரியின் ஆர்எல்டி கட்சியை தன்னுடன் கூட்டணி சேர்க்க காங்கிரஸ் முயற்சிக்கிறது.

கடந்த வாரம் லக்னோ விமான நிலையத்தில் ஜெயந்த் சவுத்ரியை சந்தித்தார் பிரியங்கா. அந்த வாய்ப்பை பயன்படுத்தி ஜெயந்துடன் கூட்டணி பேச்சும் தொடங்கினார்.

மேற்கு உ.பி.யில் அதிகமுள்ள ஜாட் சமூகத்தினரின் ஆதரவை ஆர்எல்டி பெற்றுள்ளது. இதன் ஆதரவின்றி காஜியாபாத், அலிகர், புலந்த்ஷெஹர், ஆக்ரா, மீரட், மதுரா, முசாபர்நகர், ஷாம்லி, பிஜ்னோர் ஆகிய மாவட்டங்களில் வெல்வது கடினம் என்ற சூழல் உள்ளது. ஜாட் சமூத்தினரில் பெரும்பாலானோர் விவசாயிகள் என்பதால், அவர்களது டெல்லி போராட்டத்துக்கு ஆர்எல்டி ஆதரவு அளித்தது. இந்நிலையில் ஜெயந்துடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் ரகசியப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் உ.பி. காங்கிரஸ் நிர்வாகிகள் வட்டாரங்கள் கூறும் போது, “மேற்குப் பகுதியில் மட்டும் ஆர்எல்டி ஒதுக்கும் தொகுதிகளை ஏற்பதற்கு பிரி யங்கா ஒப்புக்கொண்டார். மற்ற பகுதிகளில் காங்கிரஸை அக் கட்சி ஆதரிக்க வேண்டும். இதற்காக, பஞ்சாப் அல்லது சத்தீஸ்கரில் அடுத்து காலியாகும் மாநிலங் களவை எம்.பி. பதவி ஜெயந்துக்கு அளிக்க முடிவாகியுள்ளது. இதேவகையில் மாயாவதியையும் காங்கிரஸுடன் சேர்த்தால் வலுவான கூட்டணி அமைந்து விடும்” என்று தெரிவித்தன.

உ.பி.யில் கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2019 மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதியுடன் ஆர்எல்டி கூட்டணி அமைத்தது. இக்கூட்டணி எதிர்வரும் சட்டப்பேரவை தேர்த லிலும் தொடரும் என ஆர்எல்டி அறிவித்துள்ளது. என்றாலும் அதற்கான தொகுதி உடன்பாடு இதுவரை ஏற்படாத நிலையில் காங்கிரஸுடன் கைகோக்க அக்கட்சி தயாராகி வருகிறது.

இதையடுத்து மாயாவதியுடனும் பேச்சுவார்த்தை நடத்த பிரியங்கா தயாராகி வருகிறார். இவரது கட்சி மூலம் உ.பி.யின் தலித்துகள் ஆதரவைப் பெற பிரியங்கா திட்டமிடுகிறார். ஏற்கெனவே, ஓரளவுக்கான முஸ்லிம்கள் ஆதரவு காங்கிரஸிடம் உள்ளது. காங்கிரஸ் அமைக்கும் வலுவான கூட்டணியால், அதிகமான முஸ்லிம் கள் ஆதரவுடன் பாஜகவை தோற்கடிக்கலாம் என பிரியங்கா வியூகம் அமைத்து வருகிறார்.

கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வீசத் தொடங்கிய மோடி அலையால், பிஹார், உ.பி. உள்ளிட்ட வட மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேரத் தொடங்கின. உ.பி.யில் 2017 சட்டப்பேரவை தேர்தலில்ஆளும் சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது. இதில் பலன் கிடைக்காததால் அடுத்த சில மாதங்களிலேயே அகிலேஷ் முறித்துக் கொண்டார்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தனது முக்கிய எதிர்க்கட்சியான மாயாவதியின் பிஎஸ்பியுடன் சமாஜ்வாதி கைகோத்தது. இதில்பிஎஸ்பிக்கு கிடைத்த தொகுதிகள் கூட சமாஜ் வாதிக்கு கிடைக்கவில்லை. இதனால் அந்தக் கூட்டணியும் முடிவுக்கு வந்தது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x