Published : 04 Nov 2021 10:20 PM
Last Updated : 04 Nov 2021 10:20 PM
பெட்ரோல், டீசல் விலை ரூ.50 ஆகக் குறைய வேண்டுமானால் நாடு முழுவதும் பாஜக தோற்றுப் போக வேண்டும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்ததன் எதிரொலியாக பெட்ரோல், டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வந்தன. இதனால் பெட்ரோல் லிட்டர் 100 ரூபாயை நாடுமுழுவதும் கடந்தது, டீசலும் லி்ட்டர் 100 ரூபாய்க்கும் மேல் பல மாநிலங்களில் உயர்ந்தது. இதனால் நடுத்தர மக்கள், சாமானிய மக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர். எதிர்க்கட்சிகளும் மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கத்தொடங்கின.
இதையடுத்து, பெட்ரோல் மீதான உற்பத்தி வரிசை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்து நேற்று மத்திய அரசு அறிவித்தது இது இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் மத்தியில் ஆளும் பாஜக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூரியதாவது:
பாஜக அரசுக்கு மக்களைப் பார்த்தால் கிண்டலாக இருக்கிறதா எனத் தெரியவில்லை. பெட்ரோல், டீசல் விலையைக் கடுமையாக உயரச் செய்தது. நாடு முழுவதும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டிய நிலையிலும் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டு. இப்போது தேர்தல் முடிவுகளையும், வரவிருக்கும் தேர்தல்களையும் கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைத்துள்ளது. தீபாவளியை ஒட்டி மக்களுக்காக நீங்கள் ரூ.25 முதல் ரூ.30 வரை பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திருந்தால் நாமும் அரசாங்கம் மக்களுக்காக ஏதோ செய்திருக்கிறது என மகிழ்ந்திருப்போம். ஆனால் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் தான் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் பெட்ரோல் விலை ரூ.50க்கு வர வேண்டும் என்றால் நாடு முழுவதும் பாஜக தோற்றுப் போக வேண்டும். அது நிச்சயம் வெகு விரைவில் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசம், உத்தர்காண்ட், கோவா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டியே பாஜக பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்துள்ளதாக பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT