Published : 04 Nov 2021 12:29 PM
Last Updated : 04 Nov 2021 12:29 PM
ஜம்மு காஷ்மீரின், எல்லையோர மாவட்டமான ரஜோரியில் உள்ள நவ்ஷேரா பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார்.
பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டு பதவி ஏற்றதிலிருந்து ஒவ்வொரு ஆண்டு தீபாவளியன்றும், இந்திய எல்லையில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் 8-வது ஆண்டாக இன்றும் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினார். வீரர்களுடன் தீபாவளி கொண்டாடி, அவர்களுக்கு இனிப்பு ஊட்டிவிட்டு, இனிப்புகளை வழங்கி வீரர்களை பிரதமர் மோடி உற்சாகப்படுத்தி வருகிறார்.
இந்த ஆண்டு ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷோரி செக்டாப் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் பிரதமர் மோடி தீபாவளிப்பண்டிகையைக் கொண்டாடினார். பிரதமர் மோடி நவ்ஷேராவுக்கு வந்தவுடன் அவரை ராணுவத் தளபதி எம்எம் நரவானே வரவேற்றார். அங்குள்ள சூழல், பாதுகாப்புப்பணிகள், எல்லையில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புப்பணிகளை பிரதமர் மோடிக்கு நரவானே விளக்கிக் கூறினார்.
அதன்பின் இன்று காலை, நவ்ஷேராவில் உள்ள முகாமில், தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின்நினைவிடத்தில் பிரதமர்மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின்வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி அவர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியைக் கொண்டாடினார்.
2014-ஆண்டில் சியாச்சினுக்கு சென்ற பிரதமர் மோடி ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார்
2015-ம் ஆண்டில் பஞ்சாப் எல்லைக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி அங்கிருந்த எல்லைப் பாதுகாப்பு வீரர்கள், ராணுவத்தினருடன் தீபாவளியைக் கொண்டாடினார்.
2016ம் ஆண்டு இமாச்சலப்பிரதேசம் சென்றிருந்த பிரதமர்மோடி, அங்கு பாதுகாப்புப்பணியில் இருந்த இந்தோ-திபெத் பாதுகாப்பு படையினருடன் தீபாவளியைக் கொண்டாடினார்.
2017-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்துக்கு தீபாவளிக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, எல்லைப் பாதுகாப்புப்படையினருடன் தீபாவளியைக் கொண்டாடினார்.
2018ம் ஆண்டு உத்தரகாண்டில் உள்ள ஹர்சில் பகுதிக்குசென்ற பிரதமர் மோடி இந்தோ திபெத்திய படையினருடன் தீபாவளியைக் கொண்டாடினார்.
2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் எல்லைப்பாதுகாப்பு பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடி தீபாவளியைக் கொண்டாடினார். மேலும் பதான்கோட் விமானதளத்தில் உள்ள விமானப்படையினருக்கும் தீபாவளி வாழ்த்துகளை மோடி தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ராஜஸ்தானின் ஜெய்சல்மார் பகுதியில் உள்ள லாங்கேவாலா பகுதிகுச் சென்ற பிரதமர் மோடி அங்கு எல்லைப்பாதுகாப்பில் இருந்த ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT