Published : 01 Jun 2014 09:42 AM
Last Updated : 01 Jun 2014 09:42 AM
டெல்லியை அதிர வைத்த புழுதிப்புயல் மேலும் இருநாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனினும் தலைநகரில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீசிய அளவுக்கு புழுதிப்புயல் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தி இந்துவிடம் டெல்லியில் உள்ள மத்திய வானிலை மைய விஞ்ஞானி டி.பி.யாதவ் கூறுகையில், ‘கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் வீசியது அதிவேக காற்றுடனான இடி, மின்னல் ஆகும். இது டெல்லியின் வடபகுதி எல்லையில் உள்ள ஹரியாணா மற்றும் சண்டிகர் மாநிலங்களில் உருவாகி தலைநகரத்தை எட்டியுள்ளது. சனிக்கிழமைகூட அது டெல்லியின் தென்பகுதி, ஆக்ரா மற்றும் மதுரா ஆகிய இடங்களில் வீசியது. இது வீரியம் குறைவானது என்பதால் அதிக பாதிப்பு இல்லை’ என தெரிவித்தார்.
புயல் வீசும்போது எதிரில் வரும் நபர்கள், வாகனங்கள் கூட கண்ணுக்குத் தெரியாமல் போய்விடும் நிலை ஏற்படும். வீடுகளுக்குள்ளும் புழுதி புகுந்து படிந்துவிடும்.
கடலில் அடிக்கும் புயலை விட கோடையில் வட மாநிலங்களில் வீசும் புழுதிப்புயல், பல நேரங்களில் ஆபத்தானது. கடலில் வீசும் புயலால் அதன் கரைப்பகுதிகளிலும் மழை வரும். அதுபோல், வறண்ட பகுதியில் அடிக்கும் புழுதிப்புயலில் மண் வீசும். இந்த புயலில் கிளம்பும் மண்புழுதி அடுத்த மழை வரும் வரை அடங்காது. அந்த மண்புழுதி காற்று மண்டலத்தில் அப்படியே நிலவி இருக்கும். இந்த சூழல், குழந்தைகள் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளை மிகவும் பாதித்து விடும்.
இந்தப் புயல் குறிப்பாக கோடை காலமான மே, ஜூன் மாதங்களில் அடிக்கும். இது மழைக்காலம் வரை தொடரும். இந்தப் புயல் முதலில் ஏற்படுத்துவது மின்தடைதான். இப்படி, கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் அடித்த புழுதிப்புயலின் தாக்கம் கடுமையாக இருந்திருக்கிறது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். 6 சிறியரக விமானங்கள் சேதம் அடைந்தன. டெல்லியின் இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து 12-க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டன. பூமிக்கு அடியில் ஓடும் மெட்ரோ ரயில்களும் தாமதமானது. இதில், கிருஷ்ணா என்ற கர்ப்பிணிக்கு மெட்ரோ ரயிலிலேயே பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே பெண் குழந்தை பிறந்தது. டாக்டர் ஒருவர் மெட்ரோ ரயிலில் பயணித்தது அப்பெண்ணுக்கு உதவிகரமாக இருந்தது.
புழுதிப்புயல் உருவாவது எப்படி?
தரையில் இருந்து சுமார் 8 முதல் 14 கி.மீ. உயரத்தில் வானில் பலவகையான மேகங்கள் உருவாகும். சுமார் ஒன்று முதல் 100 கி.மீ அகலம் உள்ள ஒருவகை மேகத்தின் உள்ளும் காற்று இருக்கும். இந்த வகை மேகம் வழக்கமாக காற்று குறைவாக இருக்கும் திசையை அல்லது இடத்தை நோக்கி செல்லும். இந்த மேகத்தில் நிலவும் அழுத்தம், தட்பவெப்பநிலைக்கு ஏற்றவாறு மேல், கீழ் என வேகமான காற்றழுத்தம் கொடுக்கும். அதில் கீழ்நோக்கிய அழுத்தத்தில் தரைப்பகுதியில் பரவும் காற்று, புயலை உருவாக்குகிறது. இந்தப்புயல் உருவாகும்போது, தரைப்பகுதியில் படிந்துள்ள மண்ணை வாரி அடிப்பதால் அதை புழுதிப்புயல் என அழைக்கிறோம். இப்படி வீசி அடிக்கும் புழுதிப்புயல் ஈரப்பதம் உள்ள இடத்தை கடக்கும்போது, இடி, மின்னல் ஏற்படும். இந்தப் புயல் வீசும் வேகத்துக்கு ஏற்ப பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT