Published : 03 Nov 2021 01:51 PM
Last Updated : 03 Nov 2021 01:51 PM
100 ஆண்டுகளுக்கு முன் காசியில் இருந்து திருடப்பட்ட அன்னபூரணி சிலை கனடாவிடம் இருந்து மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தியா ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த போது, வாரணாசியிலிருந்து அன்னபூர்ணா தேவி சிலை கனடாவுக்கு கடத்தப்பட்டது, நார்மென் மெக்கென்ஸி என்பவரால் உருவாக்கப்பட்ட கலைக்கூடத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டது.
வாரணாசியிலிருந்து கடந்த 1913-ம் ஆண்டு மெக்கென்ஸியால் இந்த சிலை இந்தியாவிலிருந்து எடுத்துச்செல்லப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளரும், கலைஞருமான மேஹ்ரா தெரிவித்துள்ளார். இந்த சிலை வாரணாசியில் கங்கை நதிக்கரையில் உள்ள ஒரு கோயிலிருந்து திருடப்பட்டு மெக்கென்ஸியிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கலாம் எனத் மெஹ்ரா தெரிவித்துள்ளார்.
பீடத்தில் அமர்ந்தநிலையில் கையில் பெரிய கிண்ணத்தையும் மற்றொரு கையில் அன்னம் வழங்கும் கரண்டியும் வைத்திருப்பதுபோன்று தேவிசிலை அமைந்துள்ளது. வாரணாசியில் இன்றும் கங்கைநதிக் கரைஓரத்தில் அன்னப்பூர்ணா தேவி கோயில் அமைந்துள்ளது
சமீபத்தில் இந்தியக் கலைஞரும் ஆய்வாளருமான திவ்யா மேஹ்ரா இந்த சிலையை அடையாளம் கண்டு அதுகுறித்து ஆய்வு நடத்தியபோது, 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து இந்த சிலை எடுக்கப்பட்ட விவரம் தெரியவந்தது.
இதையடுத்து, ரெஜினா பல்கலைக்கழகத்தின் இடைக்காலத் தலைவரும், துணை வேந்திருமான டாக்டர் தாமஸ் சேஸ், கனடாவுக்கான இந்தியத் தூதர் அஜய் பிஸாரியாவை காணொலி மூலம் சந்தித்து பேசி இந்த சிலை குறித்த விவரத்தை தெரிவித்தார்.
இந்தியாவின் பாரம்பரியத்தை விளக்கும் அன்னபூர்ணா தேவி சிலை இந்தியாவிடம் ஒப்படைக்க கனடா முன்வந்தது.
இந்தநிலையில் 100 ஆண்டுகளுக்கு முன் காசியில் இருந்து திருடப்பட்ட அன்னபூரணி சிலை மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில் ‘‘100 ஆண்டுகளுக்கு முன் காசியில் அன்னபூரணி சிலை திருடப்பட்டது. இது கனடாவில் உள்ள ஒரு பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் இருந்தது. பல்கலைக்கழகத்திடம் இருந்து இந்திய அரசு அந்த சிலையைப் பெற்றுள்ளது. அது இப்போது உத்தரபிரதேச அரசுக்கு வழங்கப்படுகிறது. விரைவில் அது காசிக்கு கொண்டு வரப்படும்’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT